இந்திராணி (சசி), பாரிஜாத அபஹரணம், நகுஷன் கதை

இந்திராணி என்ற பெயரில் இரு பெண் தெய்வங்கள் உண்டு. ஒருவர் இந்திரனின் மனைவி சசி, மற்றொருவர் ஏழு கன்னியருள் ஒருவர். இந்தப் பதிவு முதல்வரைப் பற்றியது. வேதங்களிலேயே இடம் பெறும் இந்திராணி தன் கணவராலேயே அறியப்படுபவர். தனித்த வழிபாடு இல்லாதவர். இவரை மையமாகக் கொண்டு சில புராணக் கதைகள் உண்டு.

பெயர்கள்
  • சசி - இதை இவர் இயற்பெயராகக் கொள்ளலாம். பேச்சு என்று பொருள்.
  • இந்திராணி, ஐந்திரி, மகேந்திரி, சக்ராணி - இந்திரன் மனைவி என்று பொருள். மகேந்திரன், சக்ரன் ஆகியவை இந்திரனின் பெயர்கள்.
  • பௌலோமி, புலோமஜா - புலோமன் என்ற அசுரனின் மகள். புலோமன் கஸ்யப முனிவருக்கும் அவர் மனைவி தனுவுக்கும் பிறந்த மகன்.
  • சாருதாரா - அழகி
  • தேவராணி - தேவர்களின் அரசி
குழந்தைகள்

இந்திரன், சசி தேவிக்கு ஜெயந்தன், ரிஷபன், மிதுஷன் ஆகிய மகன்களும் ஜெயந்தி, தேவசேனா ஆகிய மகள்களும் இருந்தனர். தேவசேனா முருகனையும் ஜெயந்தி சுக்கிராச்சாரியரையும் மணந்தனர்.

புராணக் கதைகள்

ராஜா ரவிவர்மாவின் 'மேகநாதனின் வெற்றி'

மேற்கண்ட ஒவியம் மைசூரு ஜகன்மோஹன் அரண்மனையின் ஸ்ரீ ஜயசாம ராஜேந்திர கலைக்கூடத்தில் உள்ள ராஜா ரவிவர்மாவின் 16 ஓவியங்களுள் ஒன்று. ராவணின் மகன் மேகநாதன். அவன் தேவர் உலகத்தின் மீது படையெடுத்துச் சென்று இந்திரனை வெற்றி கொண்டான். அதனால் 'இந்திரஜித்' என்ற பட்டம் பெற்றான். தேவர் உலகத்தின் செல்வங்களைக் கொண்டு வந்து தன் தந்தை ராவணனிடம் அளிக்கும் காட்சி இது. ராவணனின் முன்பு இந்திரன் தலை குனிந்து நிற்கிறான். இந்திராணி இழுத்து வரப்பட்டு ஆடை குலைந்து நிற்கிறாள். அமராவதி வாசிகளுக்கும், லங்காபுரி வாசிகளுக்கும் உள்ள நிற வேறுபாடு காண்க. 

ரவிவர்மா தன் ஓவியங்களுக்காக அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மாணவர்கள் ஆகியோரை மாதிரிகளாக உபயோகித்தார். இந்தப் படத்தில் அவரே ராவணனுக்கு மாதிரி என்கிறார் மனு எஸ் பிள்ளை. கீழ் உள்ள அவரது படத்துடன் ஒப்பிட்டுக் காண்க.(5)


பாரிஜாத மரம் பூமிக்கு வந்த கதை (பாரிஜாத அபஹரணம்)

நாரதரின் கலகம்

இந்திரனின் நந்தவனத்தில் மட்டுமே இருந்தது நறுமணம் மிக்க மலர்கள் பூக்கும் பாரிஜாத மரம். அது பாற்கடல் கடைதலின் போது கிடைத்தவற்றில் ஒன்று. இந்திரன் அதை எடுத்துச் சென்று தன் நந்தவனத்தில் நட்டான்.  ஒருமுறை நாரதர் பாரிஜாத மலர் ஒன்றை பூமிக்குக் கொண்டு வந்து கண்ணனிடன் கொடுத்தார். அவர் அந்த மலரை ருக்மணிக்கு அளித்தார். சத்யபாமா பொறாமை கொண்டு. 'அந்த பாரிஜாத மரமே எனது தோட்டத்தில் வேண்டும்' என்று கண்ணனிடம் அடம் பிடித்தார். கண்ணனும் அவளது ஆசையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார்.

இந்திராணியின் அலட்சியம்

இந்திரனின் தாய் அதிதியின் காதணிகளை நரகாசுரன் திருடி இருந்தான். அவனைக் கொன்ற பிறகு, கண்ணனும் சத்யபாமாவும் அந்தக் காதணிகளை அதிதியிடம் அளிக்க தேவர்  உலகத்திற்குச் சென்றனர். இந்திராணி சத்யபாமாவை ஒரு சாதாரண பூவுலகப் பெண்ணாகக் கருதி  அலட்சியப்படுத்தினாள். சத்யபாமா அங்கிருந்த நந்தவனத்தில் பாரிஜாத மரத்தைக் கண்டாள். அதை வேரோடு பிடுங்கி துவாரகைக்குக் கொண்டு செல்ல கண்ணனைத் தூண்டினாள். கண்ணனும் மரத்தைப் பிடுங்கி கருடனின் மீது வைத்தார். 

பாரிஜாதப் போர்

காவலர்கள் மூலம் இதை அறிந்த இந்திராணி வெகுண்டாள். இந்திரனைக் கண்ணனுடன் போரிட்டு தனக்குரிய அந்த மரத்தை மீட்க வலியுறித்தினாள். இந்திரன் ஐராவதம் மீதேறி, தேவர்களின் படையுடன் வந்து கண்ணனை எதிர்த்தார். ஆனால், கண்ணன் இந்திரனையும் அவனது படையையும் தோற்கடித்தார். தங்கள் தவறை உணர்ந்த இந்திரனும் இந்திராணியும் கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டு, மரத்தை எடுத்துச் செல்ல அனுமதித்தனர். 

சிற்பம்

'பாரிஜாத அபஹரணம்' என்று அழைக்கப்படும் மேற்கண்ட புராண நிகழ்வு ஹொய்சாளர் கோயில்களில் சுவர்ச் சிற்பமாக இடம்பெறுகிறது. 

பாரிஜாத அபஹரணம் - கேதாரேஸ்வரர் கோயில், பேலூர்

மேற்கண்ட பேலூர் சிற்பத்தில் 
  • வேகமாக முன் செல்லும் ஐராவதம் யானை மீது இந்திரனும் அவன் பின்னால் இந்திராணியும் அமர்ந்து உள்ளனர். இந்திரன் வலது கையில் வைர ஆயுதத்தை ஓங்கியுள்ளான். ஐராவதம் நான்கு தந்தங்களைக் கொண்டுள்ளது. 
  • கண்ணன் கருடனின் மீது நேரமர்வில் வலது கால் கழுத்தைச் சுற்றி கீழே தொங்க அமர்ந்திருக்கிறான். கண்ணனின் இடது தொடைமீது அணுக்கமாக சத்தியபாமா அமர்ந்திருக்கிறாள். 
  • கருடன் கோபத்தோடு இந்திரனை நோக்கி பறந்து செல்கிறார் அவரது ஓங்கிய வலது கையிலும் வைர ஆயுதம் உள்ளது. இந்திரன் வைர ஆயுதத்தை கண்ணனை நோக்கிச் செலுத்த அதை கருடன் தன் கையில் பிடித்துக் கொண்டதாக கருத்து. 
  • கருடன் இடது கையில் பாரிஜாத மரத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அதை ஐராவதம் பறிக்க முயற்சித்தபோது உடைந்த ஒரு கிளை ஐராவதத்தின் துதிக்கையில் உள்ளது.
கீழே உள்ளது ஹொசஹொளலு லக்ஷ்மிநாராயணர் கோயில் சிற்பம். இரு துண்டுகளாக அதே சிற்பம். ஆனால் மேற்கண்ட சிற்பத்தில் உடல் மொழிகளில், முக பாவங்களில் உள்ள வேகமும் வெறியும் இங்கு மட்டுப்பட்டிருப்பதைக் காணலாம்.

பாரிஜாத அபஹரணம் கதை இரு பகுதிகளாக -  ஹொசஹொளலு லக்ஷ்மிநாராயணர் கோயில்
1. 
இந்திரன் இந்திராணி யானை மேல்

பாரிஜாத அபஹரணம் கதை இரு பகுதிகளாக -  ஹொசஹொளலு லக்ஷ்மிநாராயணர் கோயில்
2.
கண்ணனும் சத்யபாமாவும் கருடன் மீது

பாரிஜாத அபஹரணம்
கண்ணன் பாரிஜாத மரத்தை பிடுங்குவது; இந்திரனும் இந்திராணியும் வணங்கி மன்னிப்பு கேட்டு நிற்பது; பாரிஜாத மரத்தோடு கருடன் கண்ணன் சத்யபாமாவை தூக்கிச் செல்வது. 16 ஆம் நூற்றாண்டு ஓவியம் (4)

நகுஷன் கதை

இந்தக் கதை மகாபாரதத்தில் இங்கும் அங்குமாக சில வேறுபாடுகளுடன் சொல்லப்பட்டுள்ளது. 

ஒரு சமயம் விஸ்வகர்மாவிற்கு பிறந்த மகன் திரிசிரஸ் (முத்தலையோன்) பெரும் வலிமை மிக்கவனாக உருவாகிக் கொண்டிருந்தான். அவன் தன் பதவிக்கு தொல்லை தருவான் என்று எண்ணிய இந்திரன் தன் வைர ஆயுதத்தால் அவனைக் கொன்றான். அதனால் கோபம் கொண்ட விஸ்வகர்மா இந்திரனை வெல்ல விருத்தாசுரன் என்ற அரக்கனை உருவாக்கினார். திருமாலின் உதவியுடன் அரும்பாடு பட்டு அவனையும் இந்திரன் கொன்றான். இவ்விரண்டு நிகழ்வுகளாலும் பாவத்தால் பீடிக்கப்பட்டு மனவலிமையும் உடல் வலிமையும் குன்றி இந்திரன் ஒரு தடாகத்தில் தாமரைத் தண்டின் உள்ளே யாரும் அறியாமல் ஒளிந்திருந்தான்.  

இந்திரன் இல்லாமல் தேவருலகமும் பூவுலகமும் ஒழுங்கும் வளமும் இழந்து நிலைகுலைந்தன. அப்போது பூவுலகில் நகுஷன் என்ற மன்னன் இருந்தான். சந்திரகுலத்தில் சந்திரனுக்கு ஐந்தாம் தலைமுறை வாரிசு. வீரம், வலிமை, அழகு, அறிவுக்கூர்மை, அறம், புகழ் ஆகியவற்றில் சிறந்து விளங்கினான். நூறு அஸ்வமேத வேள்விகள், தவம், வேதக் கல்வி, சுயக்கட்டுப்பாடு மூலம் பெரும் ஆன்ம வல்லமையை ஈட்டி இந்திர பதவிக்கு தகுதி உடையவனாக இருந்தான்.  தேவர்கள் அவனை  தேவருலகத்தின் மன்னனாக முடி சூட்டினர். அவன் அந்த பதவிக்கு வேண்டிய கூடுதல் வலிமையை அடைய அவனுக்கு நான்முகன் ஒரு வரம் அளித்தார்.  அவன் பார்வையில் பட்ட அனைவரும் அவர்தம் சக்தியை இழக்க அவன் அதை அடைவான். அமுதமும் அவனுக்குக் கிடைத்தது. 

நகுஷனின் வீழ்ச்சி
(ஓவியர் பி எஸ் கோரே; நீர்வண்ணம்) (6)

தொடக்கத்தில் நகுஷன் தேவருலகில் மண்ணுலகைப் போலவே நல்லாட்சி புரிந்தான். பின்னர் தான் பெற்ற வரங்களால் வலிமை மிகுந்து கர்வம் கொண்டான். சிற்றின்பங்களில் திளைக்கத் தொடங்கினான். இந்திர பதவியில் அமர்ந்திருக்கும் தனக்கு இந்திராணி உரிமையானவள் என்று அவளைத் தன்னிடம் வர அழைத்தான். கற்புக்கரசியான இந்திராணி தாமரைத் தண்டினுள் மறைந்திருந்த இந்திரனைக் கண்டடைந்தாள். அவன் ஆலோசனையின் படி நகுஷனை தனது மாளிகைக்கு அவன் பெருமைக்கேற்ப பெரு முனிவர்கள் எழுவர் சுமந்து வரும் பல்லக்கில் வர வேண்டினாள். அவ்வாறு செல்கையில் அகத்திய முனிவரின் சடைமுடிக்குள் பிருகு முனிவர் அவன் பார்வை படாத படி மறைந்து அமர்ந்து கொண்டார். இந்திராணியின் மாளிகைக்குச் செல்லும் அவசரத்தில் அகத்தியரின் தலை மீது இந்திரன் கால் பட்டது. அதில் அமர்ந்திருந்த பிருகு அவன் பாம்பாக மாறி தேவருலகிலிருந்து கீழே விழ சபித்து விட்டார், நகுஷனின் பார்வை படாதவாறு அவர் அமர்ந்திருந்ததால் அவரது தவ வலிமை குறையாமல் சாபம் நிறைவேறியது.

பீமன், பாம்பாக நகுஷன், தர்மர் (6)

வனவாசத்தின் போது ஒரு நாள் பீமன் காட்டில் திரிந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு பெரும் பாம்பாக இருந்த நகுஷன் அவனைச் சுற்றி வளைத்தான். அவன் பெற்றிருந்த வரத்தின் காரணமாக பீமனின் பத்தாயிரம் யானை வலிமை காணாமல் போனது. பீமனைக் காணாமல் தர்மன் அவனைத் தேடி அவ்விடத்திற்கு வந்தான். நகுஷன் அவரிடம் "யார் உண்மையான பிராமணன்?", "மனிதன் எவ்வாறு நற்கதி அடைய முடியும்?" போன்ற அறக் கேள்விகளைக் கேட்டான். சரியான பதில்களை தர்மன் சொன்னதால் நகுஷனின் சாபம் நீங்கி அவன் மேலுலகம் அடைந்தான்.


நன்றிக்கடன்




4) Krishna Uproots the Parijata Tree, Folio from a Bhagavata Purana; Delhi region or Rajasthan, 1525-1550, Opaque watercolor and ink on paper; Los Angeles county museum of art collection via Wikimedia.org

5) Manu S Pillai waatcoconut instagram 






Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்

திருமாலின் 24 வடிவங்கள்