ஏகபாத மூர்த்தி
சிவனின் 64 வடிவங்களில் 52 வது வடிவம் ஏகபாத மூர்த்தி. அவற்றுள்ளும் சிறப்பான 25 மகேசுவர வடிவங்களுள் ஒன்று. ஐந்து முக மகேசுவர மூர்த்தியின் வடக்கு முகமான வாமதேவ முகத்தில் இருந்து தோன்றிய வடிவம். பேரூழிக் காலத்தில் முழுப் பிரபஞ்சமும் அனைத்து கடவுளரும் உயிர்களும் ஏகபாத மூர்த்தியின் ஒற்றைக் காலில் ஒடுங்குவர். காலத்தால் மூத்த ஏகபாதரின் சிற்பம் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் ரங்க மஹலில் கிடைத்த சுடுமண் சிற்பம் ஆகும். இது தற்போது பீகானேர் கங்கா சிங் அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது. அஜ ஏகபாதர் - பீகானேர் அருங்காட்சியகம், 33 x 20.5 cm 1918 இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சுடுமண் சிற்பம் பொ ஆ 4 ஆம் நூற்றாண்டு குப்தர் காலத்தது. 1960 இல் தான் அஜ ஏகபாதர் என்று வி எஸ் அக்ரவாலா அவர்களால் அடையாளம் காணப்பட்டது. இரு கொம்புகளுடன் ஆன ஆட்டின் தலை, மனித உடல், இரு கைகள், ஒற்றை யானைக் கால் ஆகியவை கொண்டுள்ளது. (படம் நன்றி: American Institute of Indian Studies, Center for Art and Archaeology, Gurugram, Haryana; Public Domain) அஜ ஏகபாதர் என்ற தெய்வமாக ரிக் வேதத்தில் ஏகபாதர் அறிமுகம் ஆகிறார். ...