ஏகபாத மூர்த்தி

சிவனின் 64 வடிவங்களில் 52 வது வடிவம் ஏகபாத மூர்த்தி. அவற்றுள்ளும் சிறப்பான 25 மகேசுவர வடிவங்களுள் ஒன்று. ஐந்து முக மகேசுவர மூர்த்தியின்  வடக்கு முகமான வாமதேவ முகத்தில் இருந்து தோன்றிய வடிவம். பேரூழிக் காலத்தில் முழுப் பிரபஞ்சமும் அனைத்து கடவுளரும் உயிர்களும் ஏகபாத மூர்த்தியின் ஒற்றைக் காலில் ஒடுங்குவர்.


காலத்தால் மூத்த ஏகபாதரின் சிற்பம் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் ரங்க மஹலில் கிடைத்த சுடுமண் சிற்பம் ஆகும். இது தற்போது பீகானேர் கங்கா சிங் அரசு அருங்காட்சியகத்தில் உள்ளது.

அஜ ஏகபாதர் -  பீகானேர் அருங்காட்சியகம், 33 x 20.5 cm
1918 இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சுடுமண் சிற்பம் பொ ஆ 4 ஆம் நூற்றாண்டு குப்தர் காலத்தது. 1960 இல் தான் அஜ ஏகபாதர் என்று வி எஸ் அக்ரவாலா அவர்களால் அடையாளம் காணப்பட்டது. இரு கொம்புகளுடன் ஆன ஆட்டின் தலை, மனித உடல், இரு கைகள், ஒற்றை யானைக் கால் ஆகியவை கொண்டுள்ளது.

(படம் நன்றி: American Institute of Indian Studies, Center for Art and Archaeology, Gurugram, Haryana; Public Domain)


அஜ ஏகபாதர் என்ற தெய்வமாக ரிக் வேதத்தில் ஏகபாதர் அறிமுகம் ஆகிறார். (அஜ = ஆடு, பிறவியில்லாத). ரிக் வேதத்தில் ஆறு முறை  அப்பெயர் வருகிறது. அதில் ஐந்து முறை அஹிர்புத்ன்யர் (அஹி = நாகம்; புத்ன்ய = ஆழம்; ஆழத்தின் நாகம்) என்ற தெய்வத்துடன் இணைந்து வருகிறது. அதர்வ வேதத்தில் அஜ ஏகபாதர் சூரியனால் படைக்கப்பட்ட மண்ணுலகையும் விண்ணுலகையும் மண்ணில் கால் ஊன்றி விண்ணைத் தாங்கி நிலை நிறுத்துகிறார். 

மகாபாரத, புராண காலங்களில் அஜ ஏகபாதர்,  அஹிர்புத்ன்யர்  ருத்திரர்களோடு இணைகின்றனர். பதினோரு (ஏகாதச) ருத்திரர்களின் பெயர்ப் பட்டியல்கள் வெவ்வேறு நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன. விஷ்வகர்மா சில்ப என்ற நூலின் பட்டியலில் அஜ, ஏகபாதர், அஹிர்புதன்யர் முதல் மூவராக இடம் பெறுகிந்றனர். ரூப மண்டன பட்டியலில்  அஹிர்புதன்யர் மட்டுமே உள்ளார். அம்சுமத் பேதாகம பட்டியலில்  யாரும் இடம் பெறவில்லை. லிங்க புராணத்தில் உள்ள இரு பட்டியல்களில் முதல் ஒன்றில் அஜ ஏகபாதர் உள்ளார். அஜ ஏகபாதர்,  அஹிர்புதன்யர் இருவரும் மகாபாரதத்தில் நான்முகனின்  மானச மகன்களான ஆறு முனிவர்களுக்குப் பிறந்த 11 ருத்திரர்களில் இருவர். மேலும் இவர்கள் இருவரும் குபேரனும் பொன்னின் காவலர்கள். விஷ்ணு புராணத்தில் இவர்கள் விஷ்வகர்மாவுக்குப் பிறக்கின்றனர். ஆனால் ருத்திரர்களின் பட்டியலில் இல்லை.  

பின்னர் சிவன் பெருந்தெய்வமாக நிலைகொண்டபோது அவர் உருவங்களுள் ஒன்றாக ஏகபாதர் ஆனார். 

ஏகபாதரின் சிற்ப அமைதியில் இரு வகைகள் காணப்படுகின்றன. ஒரு வகை தமிழகத்திலும் மற்றொரு வகை வடக்கு ஆந்திரப் பகுதி உள்ளடங்கிய கலிங்கத்திலும் காணப்படுகின்றன.

தமிழகத்தில் ஏகபாதமூர்த்தி உருவம்

தமிழகத்தில் ஏகபாதமூர்த்தியின் மூன்று வடிவங்கள் காணப்படுகின்றன. மூன்று வடிவங்களும் சிவனின் 64 வடிவப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  1. ஏகபாத மூர்த்தி
  2. ஏகபாத திரிமூர்த்தி
  3. திரிபாத திரிமூர்த்தி
ஏகபாத மூர்த்தி

ஏகபாதர் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில், நந்தி மண்டபம்
மேலே சிவ உருவம், கீழே ஒற்றைக் கால். 4 கைகள் - பின் கைகளில் மான் மழு, முன் கைகளில் அபய வரதம். கால் பக்கத்தில் தலைமேல் கைகூப்பித் தொழும் இரு அடியவர்கள்.
(படம் நன்றி: 
Richard Mortel from Riyadh, Saudi Arabia, CC BY 2.0 via Wikimedia Commons)

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் இது போன்ற சுதைச் சிற்பம் உள்ளது. 

ஒற்றைக்கால் பரிபூரண சமநிலை, நிலைத்தன்மை, இருமைகளைக் கடந்த ஒருமை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.

ஏகபாத திரிமூர்த்தி 

ஏகபாத திரிமூர்த்தி - 1810 ஆம் ஆண்டு தென்னிந்திய காகித ஓவியம்.
தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.
ஏகபாதரின் ஒற்றைக் காலில் வலது பக்கம் நான்முகனும் இடது பக்கம் திருமாலும் ஊழிக்காலத்தில் ஒடுங்குவது. ஊழி முடிந்த பின் வெளி வருவது என்றும் கொள்ளலாம். இருவரின் உடல் மட்டுமே தெரிய கால்கள் தெரிவதில்லை. மூவரின் முன் கைகள் அபய வரதம் காட்ட பின் கைகளில் அவரவர் ஆயுதங்கள். 
© The Trustees of the British Museum. Shared under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International (CC BY-NC-SA 4.0) licence.

ஏகபாத திரிமூர்த்தி -
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புது மண்டபம்
(படம் நன்றி: Tulasi Ram Reddy via Instagram)

ஏகபாத மற்றும் திரிபாத திரிமூர்த்தி வடிவங்கள் லிங்கோத்பவ வடிவத்தைப் போல முப்பெரும் தெய்வங்களுள் சிவனின் முதன்மையை வலியுறுத்தும் நோக்கம் கொண்டது.

திரிபாத திரிமூர்த்தி
 
திரிபாத திரிமூர்த்தி - 1860 ஆம் ஆண்டு வட தமிழக காகித ஓவியம்.
தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.
© The Trustees of the British Museum. Shared under a 
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International (CC BY-NC-SA 4.0) licence.

திரிபாத திரிமூர்த்தி
ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருவானைக்கா

ஏகபாதரின் மற்றொரு வடிவம்.  நான்முகனும் திருமாலும்இரு கை கூப்பி வணங்கிய நிலையில் உள்ளனர். நான்முகனின் மற்ற இரு கைகளில் அக்கமாலை, சுருக் என்னும் நெய்க்கரண்டி, திருமாலின் மற்ற இரு கைகளில் ஆழி சங்கு. இருவரின் ஒரு கால் மட்டும் முழுவதுமாக வெளிப்புறம் நீண்டுள்ளன. இவ்விரு கால்கள் மற்றும் ஏகபாதரின் ஒற்றைக்கால் ஆக முக்கால் (திரிபாதம்) மூவர் (திரிமூர்த்தி). ஏகபாதர் இடபம் மேல் நிற்க நான்முகனின் கீழ் அன்னமும் திருமாலின் கீழ் கருடனும் உள்ளனர். கருடன் பக்கத்தில் ஒரு முனிவர் வலது கை உயர்த்தி போற்றி நிற்கிறார். சிவனின் இடது கை வரதமாக இல்லாமல் கடி ஹஸ்தமாய் இடுப்பில் உள்ளது.

தமிழகத்தில் அதிகமாக காணப்படும் ஏகபாத வடிவம் இதுவே. கோயில் தூண்கள் அல்லது சுவர்களில் காணப்படுகிறது.
  • மதுரை திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சன்னிதி தூண், 
  • திருவொற்றியூர் தியாகராஜர் கோவில் நடராஜர் சன்னிதியின் வெளிப்புற வடக்குச் சுவர், 
  • உத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதியின் வெளிப்புற வடக்குத் தேவகோட்டம் 
  • திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில், 
  • திருமறைக்காடு (வேதாரண்யம்), 
  • திருச்சி பிச்சாண்டார் கோவில் (உத்தமர் கோவில்), 
  • நெல்லை மாவட்டத்தில் உள்ள பல கோயில்களில் 
திருவாரூர் அருகில் உள்ள தப்பளாம்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் மட்டும் இவருக்குத் தனிச் சந்நிதி உள்ளது.

 
கலிங்க ஏகபாதச் சிற்பங்கள்

தமிழகத்தில் காணப்படும் ஏகபாதர் சிற்பங்கள் பிற்காலத்தவை. 14-ம் நூற்றாண்டுக்கு பிறகு உருவானவை. ஆனால் கலிங்கப் பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதலே சிவன் கோயில்களில் ஏகபாதர் சிற்பங்கள் முக்கியத்துவம் பெற்று விளங்கின. முற்கால கலிங்க சிவன் கோயில்களில் கருவறையின் வெளிச்சுவரில் வடக்குப் பக்கத்தில் மகிஷாசுரமர்த்தினி மைய தெய்வமாக இருந்தது. அதன் இரு பக்கத்து துணைக் கோட்டம் ஒன்றில் ஏகபாதர் இடம் பெற்றார். அல்லது ஜகமோஹனத்தின் வடபகுதியில். 

உருவ அமைதியிலும் வேறுபாடுகள் உள்ளன. 
  • கலிங்க மரபில் இரு திரிமூர்த்தி வடிவங்களும் இல்லை. தனித்த ஏகபாதர் வடிவம் மட்டுமே உண்டு.
  • கலிங்கச் சிற்பங்கள் ஏகபாதரை ரௌத்திர முகத்துடன் சிவனின் பைரவ வடிவமாக காட்டுகின்றன - திறந்த வாய், கோரைப்பற்கள், வெறித்த கண்கள். 
  • கலிங்க ஏகபாதர் விறைத்த குறியுடன் காணப்படுகிறார் (ஊர்த்துவ லிங்கம் - நிமிர் குறி; ஊர்த்துவ - விரைத்த, மேல்நோக்கிய) . இது ஊர்த்துவ ரேதஸை குறிக்கும். ரேதஸ் - விந்து. ஊர்த்துவ ரேதஸ் - மேலெழு விந்து) விந்துவை வெளியிடாமல் உள்ளே மேல் நோக்கிச் செலுத்தி உன்னத நிலையை அடைவதைக் குறிக்கும். சிவன் அத்தகைய யோகி. அவருக்கும் ஊர்த்துவ ரேதஸ் (மேலெழு விந்தன்) என்ற பெயர் உண்டு. பல கலிங்க சிவ வடிவங்களில் சிவன் விறைத்த குறியுடன் காணப்படுகிறார்.
  • மேற்கண்ட இயல்புகளால் கலிங்க ஏகபாதர் பைரவரின் ஒரு வடிவமாக அறியப்படுகிறார். ஏகபாத பைரவர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த வடிவம் 8 ஆம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை கலிங்கத்தில் செல்வாக்கு செலுத்திய பாசுபத மதத்தோடு தொடர்புடையது.
மற்ற சிற்பக் கூறுகள் - ஜடாமகுடத்தின் முன்பாகத்தில் பிறைச் சந்திரன், நெற்றிக்கண், நான்கு கைகள், இரு பக்கம் இரு அடியவர்கள்/ பணியாட்கள். தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் (இது அனைத்து தெய்வங்களுக்கும் உண்டு). நான்கு கைகளில் உள்ள ஆயுதங்கள் காலத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன.

ஏகபாதர்  - தாளேஸ்வரர் கோயில் புவனேஸ்வரம், 8 ஆம் நூற்றாண்டு.
பின் கைகளில் அக்கமாலை, சூலம்; முன் கைகளில் வரதம், நீர்க்குடுவை.
துணிக்கு மேலே நிமிர் குறியின் நுனி தெரிகிறது. இடது கையில் உள்ள நீர்க்குடுவையின் மேல் பாகமும் தெரிகிறது. வலது பக்கம் அடியவர் ஒருவர் வணங்கி அமர்ந்திருக்கிறார். இடது பக்கம் மற்றொருவர் சூலத்தைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்.
(படம் நன்றி: sudeep pramanik via google maps)

ஏகபாதர்  - மதுகேஸ்வரர் கோயில், முகலிங்கம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஆந்திர பிரதேசம். 9 ஆம் நூற்றாண்டு.
பின் கைகளில் சூலம், மான்; முன் கைகளில் அக்கமாலை, நீர்க்குடுவை.
இக்கால ஏகபாதர் சிற்பங்களில் மானுக்கு பதிலாக நாகம் இருப்பதுண்டு

ஏகபாதர் சிங்கநாத் கோயில் பதம்பா (Badamba) ஓடிஷா, 9 ஆம் நூற்றாண்டு.
அரிதாக இதுபோன்று ஏகபாதர் இரு கைகளுடன் அமைவது உண்டு. வலது கையில் அக்க மாலை, இடது கையில் நீர்க் குடுவை. இவரது வலது காதில் உள்ள சர்ப்ப குண்டலம் குறிப்பிடத்தக்கது. மேலே இரு வித்தியாதரர்கள் மாலையுடன் பறக்கும் நிலையில் உள்ளனர்.

ஏகபாதர், சோமேஸ்வரர் கோயில், முகலிங்கம் - 10 ஆம் நூற்றாண்டு
பின் இடது கையில் மானுக்கு பதிலாக நாகம். ஜடாமகுடம், கோரைப் பற்கள். ஆரம், தோள்வளை, கழல், பூணூல் ஆகிய ஆபரணங்களும் நாகங்களால் ஆனவையாக உள்ளன. இடது பக்கத்தில் மகரத்தின் மீது கங்கையும் வலது பக்கத்தில் பகிரதனும் நிற்கின்றனர்.
(படம் நன்றி: 
G.N. Subrahmanyam, CC0, via Wikimedia Commons)

10 - 11 ஆம் நூற்றாண்டுகளில் ஏகபாதர் சிற்பத்தின் அமைதியில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. 
  • நாகம்/மான், நீர்க்குடுவை இவற்றிற்கு பதிலாக வலது பின் கையில் உடுக்கையும் முன் கை ஒன்றில் கபாலமும்.
  • ஏகபாதர் காலின் கீழ் கிடந்த நிலையில் பிணம்.
  • முண்ட மாலை 
  • பக்கத்தில் பணியாட்கள் கையில் கபாலம், வாள் போன்ற ஆயுதங்களுடன் பைரவர் போன்ற தோற்றம்.
  • இந்த மாற்றங்கள் பத்தாம் நூற்றாண்டு முதல் வளர்ச்சி அடைந்த சாக்த தாந்திரீக மரபின் தாக்கத்தை குறிக்கிறது.
ஏகபாதர் குண்டேஸ்வரர் கோயில் 10 ஆம் நூற்றாண்டு
நான்கு கைகளில் வலது பின் கையில் உடுக்கை. மற்றும் மூன்று கைகள் உடைந்துள்ளன. நாக ஆபரணங்கள். தாமரை பீடத்தின் கீழ் கிடந்த நிலையில் பிணம். கால் பக்கத்தில் உள்ள இருவரும் ஜடா மண்டல முடி அலங்காரம், வலது கையில் வாள், இடது கையில் கபாலம் கொண்டுள்ளனர்.
(படம் நன்றி: Thomas Donaldson கட்டுரை)

பதினோராம் நூற்றாண்டில் பாசுபத மதத்தின் தாக்கம் குறைந்தது. சிவன் கோயில்களில் ஏகபாதரின் முக்கியத்துவம் குறைந்து மற்ற சிவ வடிவங்கள், அட்டதிப்பாலகர்கள், மிதுனர்கள், குருக்கள், அரச குடும்பத்தினர் ஆகியோர் சிற்பங்கள்  இடம்பெறலாயின. இருப்பினும் அங்கும் இங்குமாக குறிப்பாக சாக்தக் கோயில்களில் ஏகபாதர் சிற்பங்கள் தொடர்ந்து இடம் பெற்றன. மேலும் ஏகபாதர் சிற்பம் கோயிலின் வடக்கு பக்கத்தில் இருந்து தெற்கு பக்கத்திற்கு இடமாற்றம் பெற்றது.

ஏகபாதர் 11 ஆம் நூற்றாண்டு
சோமநாதர் சிவன் கோயில் கொராடியா ஒடிசா
முன் கைகளில் சூலம் கபாலம் பின் கைகளில் உடுக்கை அக்கமாலை (பாசத்திற்கு பதில் அக்கமாலை என்பதை தவிர தமிழக பைரவரின் அதே ஆயுதங்கள்). முண்ட மாலை அணிந்துள்ளார். தாமரை பீடத்தின் கீழே படுத்திருக்கும் ஒரு பிணம்

(படம் நன்றி: Indian Temple and Architecture™)


நடுகல் 11 ஆம் நூற்றாண்டு
மேலடுக்கில் சிவன் ஏகபாத உருவத்தில் இருக்கிறார். அரசு அருங்காட்சியகம் புவனேஸ்வரம்
(படம் நன்றி: Sailesh Patnaik, CC BY-SA 4.0 via Wikimedia Commons)


ஏகபாதர்
ஒடிசா பலாங்கிர் மாவட்டம் டிடலாகர் ரயில் சந்திப்பு அருகில் இருக்கும் பைரவ மலையின் பாறைச் சிற்பம்.

பின் கைகளில் உடுக்கை, சூலம்; முன் கைகளில் வாள், கபாலம். ஒற்றைக் காலின் கீழ் பிணம். முண்ட மாலை.
(படம் நன்றி: கீதாஞ்சலி ரௌத் கட்டுரையில் இருந்து)

13ம் நூற்றாண்டில் வைணவ சம்பிரதாயத்தின் தாக்கம் கலிங்கத்தில் மேலோங்கிய போது ஏகபாதர் சிற்பம் மேலும் மறையத் தொடங்கியது. இந்த சமயத்தில் ஏகபாதரின் நிமிர் குறியும் இல்லாமல் ஆனது. ஏகபாத வடிவத்தில் இருந்துதான் ஜகன்னாதரின் வடிவம் உருவாகியது என்ற கருத்தும் உள்ளது.

மற்ற இடங்களில் ஏகபாதர்

நேபாளம்

ஆட்டின் மீது நிற்கும் ஏகபாத திரிமூர்த்தி-  பாடன் நேபாளம் (படம் நன்றி: Bijaya2043, CC BY-SA 4.0  via Wikimedia Commons)

கர்நாடகா

ஏகபாத திரிமூர்த்தி பயங்கரேஸ்வரர் கோயில், பணேமங்களூரு, தக்ஷிண கன்னடா மாவட்டம் ,கர்நாடகா நான்முகன் மற்றும் திருமாலின் இரு கால்களின் மேற்பாகங்கள் தெரிந்தாலும் அவற்றின் கீழ்ப்பாகமும் பாதங்களும் சிவனில் ஐக்கியமாகி உள்ளன. எந்த ஒரு காலும் முழுமையாக வெளியே இல்லை. (படம் நன்றி: Ancient Hindu FB post)

மரச்சிற்பங்கள்

திரிபாத திரிமூர்த்தி - மரச் சிற்பம்
தமிழ்நாடு - 19 ஆம் நூற்றாண்டு
இருப்பிடம்: புது தில்லி அருங்காட்சியகம்
இந்த மற்றும் கீழுள்ள மரச்சிற்பங்கள் இரண்டிலும் நான்முகனும் திருமாலும் இடம் மாறி இருக்கின்றனர்.
(படம் நன்றி: New Delhi Museum via Wisdom library)

திரிபாத திரிமூர்த்தி - தேர் சிற்பம்
கல்யாண நரசிம்மர் கோயில், ராமகிரி (திண்டுக்கல் அருகில்)
படம் நன்றி: R. K. K. ராஜராஜன்)


உலகளவில் ஒற்றைக் கால் தெய்வங்கள்

பல நாடுகளில் நாட்டார் கதைகளில் ஒற்றைக் கால் தெய்வங்கள் வருகின்றன. சில நன்மை செய்பவை, சில தீமை செய்பவை
(படம் நன்றி:Prachi Virag Sontakke கீழே துணையில் காண்க)


துணை

தமிழ் விக்கி; 64 சிவவடிவங்கள்: 52-ஏகபாத மூர்த்தி

அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவ வடிவங்களும் தத்துவ விளக்கங்களும்; இரா இராமகிருட்டினன்; நர்மதா பதிப்பகம்; 2016

Elements of hindu iconography; T. A. Gopinatha Rao; Part II; pages 370, 382 - 385, 387 - 388, 393, 397-401

Ekapada Siva images in Orissan Art; Thomas Donaldson; Ars Orientalis Vol. 13 (1982), pp. 153-167


https://ashishsarangi.wordpress.com/2019/07/08/ekapada-the-single-footed-cult/



மேலும் சில படங்கள்

திரிபாத திரிமூர்த்தி - திருவொற்றியூர் தியாகராஜர் கோவில் (படம் நன்றி: Ancient Hindu FB post)

ஏகபாத திரிமூர்த்தி, உத்தரகோசமங்கை
படம் நன்றி:  http://www.tholliyal.com/2016/05/blog-post_62.html


ஏகபாதர்,10 ஆம் நூற்றாண்டு
64 யோகினி கோயில், ஹிராபுர்,  ஒடிசா
முன் கைகளில் வாள் கேடயம்
(படம் நன்றி: Rajeshjena453, CC BY-SA 4.0 via Wikimedia Commons)












Comments

Popular posts from this blog

திருமாலின் 24 வடிவங்கள்

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்