முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்

சிற்பங்களில் முருகருக்கு வாகனமாக விளங்கும் மயில்கள் மூவகை:
 
மந்திர மயில் (பிரணவ மயில்)

முருகர் மாங்கனி வேண்டி,  உலகைச் சுற்றி வந்தபோது, அவருக்கு வாகனமாக இருந்தது மந்திர மயில். இது ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவம். 

அருணகிரிநாதர், 
"ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது
ஆடுமயில் என்பது அறியேனே"
என்று போற்றுகிறார். பொருள்: 'ஒப்பற்ற ஓங்கார மந்திர வடிவ நிலை கொண்டது ஆடும் மயில்தான் என்று அறியவில்லையே'.

தகராலய ரகசியம் - (தகரம் - சிறிய ஆகாயம், அதாவது இதயம்). தியானத்தில் பிரணவ சொரூபமான மயில் மீது முருகனை பாலகனாக தரிசித்தல் . பாம்பன் சுவாமிகளுக்கு இந்தக் கோலத்தில் அவன் காட்சியளித்தான். இது `குக ரகசியம் என்றும் அழைக்கப்படுகிறது, 

தேவ மயில் (இந்திர மயில்)

சூரபத்மனுடன் போரிடும்போது, சூரன் அவருடைய ஆற்றலுக்கு எதிர்த்து நிற்க முடியாமல் சக்ரவாகப் பட்சியாக உருவமெடுத்து ஓடினான். அவனைத் தொடர்ந்து செல்ல இந்திரன் மயிலாக உருமாறி முருகரைத் தாங்கிச் சென்றான். இது தேவ மயில்.

அசுர மயில்

சூரபத்மனுடனான போரின் இறுதியில், முருகர் மருத மரமாக நின்ற அவனை வேலால் இரண்டாகப் பிளந்தார். அது, மயிலாகவும் சேவலாகவும் ஆனது. சேவல் முருகனின் கொடியானது. மயில் அவன் வாகனமானது. இது அசுர மயில்.

சிற்ப அமைதி
  • முருகரின் இடது பக்கம் மயிலின் முகம் இருந்தால் அது இந்திர மயில்.
  • முருகரின் வலது பக்கம் மயிலின் முகம் இருந்தால் அது அசுர மயில்.
  • மயிலின் முகம் நேராக இருந்தால் அது மந்திர மயில்.
 தேவ / இந்திர மயில் - ஆவுடையார் கோயில்

தேவ / இந்திர மயில் - குடுமியான் மலை

அசுர மயில் - சாயாவனம் சாயவனேஸ்வரர் கோயில்
(படம் நன்றி: அர்ஜுன வல்லபா இணையம் வ்ழி)

மந்திர மயில், நேபாளம், 12-13 நூற்றாண்டு

Los Angeles County Museum of Art (public domain)

மயில் வாகனம் ஆணவம், அகந்தை மற்றும் தீய எண்ணங்களை அழித்து, ஞானத்தையும் அருளையும் வழங்குவதைக் குறிக்கிறது.

வள்ளி தெய்வானையுடன்
  • விரித்த தோகையை உடைய மயிலின் மீது முருகன் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருள்வது.
  • விரித்த தோகையை உடைய மயில்மீது ஆறுமுகனாக வள்ளி, தெய்வானை உடன் எழுந்தருள்வது. இதுவே மிகச்சக்தி வாய்ந்த முருகனின் திருவுருவம்.
  • மயிலின் தலை வள்ளியம்மையை நோக்கியிருப்பது மோட்சத்தை அளிக்கும், தெய்வானையை நோக்கியிருப்பது இவ்வுலக இன்பங்களை அளிக்கும், நேராக இருப்பது இரண்டையும் அளிக்கும்.
மணி மயில்கள்

நாத மயில்

மணிக்கும் நாதம் என்று பொருளுண்டு. நாதமயமான மயில், `நாத மயில்’. இது பார்வைக்குக் கிட்டாத மயில். முருகன் இந்த மயில் மீதிருந்து உபதேசம் செய்கிறான். இம்மூர்த்தியை தியானிப்பது மட்டுமே வழக்கம். சிலையாக அமைப்பதில்லை.

சக்தி மயில்

மணி என்பது மனோன்மணியாகிய பராசக்தியைக் குறிக்கும். பராசக்தியே மயில் வடிவம் தாங்கி குமரனுடன் ஆடி மகிழ்கிறாள். இதனால் இறைவிக்கு, `மயிலம்மை’ என்பது பெயராயிற்று. இம்மயில் முருகனைவிடச் சற்றுப் பெரியதாக விளங்க, முருகன் இளையவனாக அருகில் இருந்து அதை ஆரத்தழுவி மகிழ்வான்.

ஔஷத மயில்

ஔஷதம் - நோய்களைத் தீர்க்கும் மருந்து. மயில் தோகையை மருந்தாக நாட்டுப்புற வைத்தியர்கள் பயன் படுத்துவதுண்டு. பிறவிப் பிணியைத் தீர்க்கும் மயில். பவரோக வைத்தியநாதனாகிய முருகன் இம்மயில்மீது அருவமாக எழுந்தருள்கிறான். அவன் இருப்பதைக் குறிக்க மயில்மீது அவனுடைய வேல் மட்டுமே தோன்றும். தவத்திரு பாம்பன் சுவாமிகளுக்கு விபத்து ஏற்பட்டபோது மயிலும் வேலும் தோன்றி அந்நோயை நீக்கியது.  

ஆன்ம மயில்

சிவ ஆலயங்களில் கருவறைக்கு நேரே கொடி மரத்தினை யொட்டி அமையும் நந்தியை `ஆன்ம நந்தி' என்பது போலவே முருகன் ஆலயங்களில் கொடி மரத்துக்கு அருகே அமையும் மயில் `ஆன்ம மயில்'. குலம், கல்வி, செல்வம் என்னும் மூன்று செருக்குகளையும் நீக்கும் நோக்கம் உடையது.

பிள்ளையார் கொடுத்த வேத மயில்

சிவனுக்கு வேதம் விடை வாகனமாக இருப்பது போலவே  முருகனுக்கு வேதம் மயிலாகத் திகழ்கிறது. கமலாசுரன், சங்காசுரன் என்பவர்கள் அசுரர்கள். சங்காசுரன் நன்முகனிடம் இருந்து வேதத்தைப் பிடுங்கிக்கொண்டு கடலில் ஒளிந்துகொண்டான். படைப்புத் தொழில் தடைப்பட்டது.  பிள்ளையார் வேதத்தை மீண்டும் படைத்து நான்முகனுக்கு அளித்தார். அசுரர்களுடன் போர் புரிய கார்க்கியர் என்ற முனிவர் வேள்வியில் இருந்து ஓர் அழகிய பொன் மயிலைத் தோற்றுவித்து பிள்ளையாருக்குத் தந்தார். போரில் வென்ற பின் பிள்ளையார் அந்த மயிலைத் தன் தம்பிக்கு அளித்தார் என்று விநாயக புராணம் கூறுகிறது. வேத வேள்வியில் இருந்து தோன்றியதால், இதற்கு `வேத மயில்’ என்பது பெயராயிற்று.

இது தவிர குழந்தை முருகனைக் காண வந்த சூரியனும் அனலனும் தங்கள் திருமேனியில் இருந்து மயிலையும் கோழிக்கொடியையும் உருவாக்கிக் கொடுத்தனர். இந்த மயிலின் முகம் பின்புறம் நோக்கி இருக்கும். அதைக் காண முதியாது.

பாம்பன் சுவாமிகளும் அருணகிரிநாதரும் மயிலைப் போற்றி அவனை அழைத்து வருமாறு பாடியுள்ளனர். 


Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

திருமாலின் 24 வடிவங்கள்