கருடன்
இந்த சிற்பம், திருக்குறுங்குடி (நாங்குநேரி, நெல்லை) கோவில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ளது.
இதில் கருடன், ஒரு கையில் ஒரு ஆமையையும், மற்றொரு கையில் ஒரு யானையையும் பிடித்துக்கொண்டு இருக்கிறார். அலகில் கவ்வியுள்ள மரக்கிளையில் சில ரிஷிகள் தலைகீழாக தொங்கியபடி தவம் செய்கிறார்கள்.
இதன் பின்னுள்ள தொன்மம்:
அமிர்த கலசத்தைத் தேடிப்போகும் கருடன் தன் தந்தை கஷ்யபரைச் சந்தித்தான். தனக்குப் பணிகள் நிறைய இருப்பதால், சத்தான உணவு வேண்டும் என்று தந்தையிடம் கேட்டான். கஷ்யபர் அருகில் உள்ள ஏரியைக் காண்பித்து, அங்கு ஒரு யானையும் ஆமையும் ஒன்றோடு ஒன்று சண்டை போடுவதாகவும், அந்த இரண்டையும் பிடித்துத் தின்றுகொள்ளலாம் என்று காட்டினார்.
விபாவசு, சுப்ரீதிகா என்ற இருவர் உடன்பிறந்தோர். இருவரும் சொத்துப் பிரிவினைக்காக சண்டை போட்டுக் கொண்டனர். விபாவசு தன் தம்பியை யானையாகப் பிறக்குமாறு சபித்தான். சுப்ரீதிகா தன் அண்ணனை ஆமையாகப் பிறக்குமாறு சபித்தான். யானையாகவும், ஆமையாகவும் ஆன பின்னும் இருவரும் கஷ்யபர் காட்டிய ஏரியில் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த இருவரையும் தின்றபின் அமிர்த கலசத்தை எடுக்கச் செல் என்று சொன்னார் கஷ்யபர். கருடன் பாய்ந்து சென்று ஒரு கையால் யானையின் தும்பிக்கையையும் மற்றொரு கையால் ஆமையின் கழுத்தையும் பிடித்தான். பிறகு சாவகாசமாக இரண்டையும் தின்ன ஓர் இடத்தைத் தேடி
ஒரு ஆலமரத்தில் அமர்ந்தான். ஆனால் கருடனின் கனம் தாங்காமல் மரக்கிளை முறிந்து கீழே விழப்போனது. அந்த மரக்கிளைகளில் வால்கில்ய ரிஷிகள் தலைகீழாகத் தொங்கி தவம் செய்துவந்தனர்.
வால்கில்யர்கள் மிகச் சிறிய உருவம் உடைய முனிவர்கள். கருடன் பிறப்புக்கே வால்கில்யர்கள்தான் காரணம். அந்த முனிவர்கள் கீழே விழுந்து விடக்கூடாதே என்று கருடன் பாய்ந்து அந்தக் கிளையை தன் அலகால் கவ்விக் கொண்டான்.
அந்தக் காட்சியைத்தான் சிற்பிகள் திருக்குறுங்குடிக் கோயில் சுவரில் வடித்துள்ளனர்
மூலம்: வாட்ஸ் அப் இல் CSB
Comments
Post a Comment