வீரபத்திரர்
சிவன் புரிந்த எட்டு வீரத் திருவிளையாடல்களில் ஒன்று தக்கன் யாகத்தை அழித்து அவன் தலையைத் துண்டித்தது. அதை அவர் நேரடியாகச் செய்யவில்லை. அதற்காக அவர் தன்னிலிருந்து உருவாக்கிய வீர அம்சமே வீரபத்திரர். இந்த நிகழ்வு குறித்த புராணக் கதை இறுதியில் விவரிக்கப்பட்டுள்ளது.
சிற்ப இலக்கணம்
ஸ்ரீதத்வநிதி, காரணாகமம் ஆகிய நூல்கள் வீரபத்ரரின் சிற்ப இலக்கணத்தைக் கூறுகின்றன. (1)
- கோபம் பொங்கும் பயங்கரமான முகம், மூன்று கண்கள், கோரைப் பற்கள்
- ஜுவாலாமகுடம் (*)
- 4 கைகள் - வலது கைகளில் வாளும், அம்பும்; இடது கைகளில் வில்லும், கதையும்
- மண்டையோட்டு மாலை
- மணிகளால் ஆன மாலை, தேள்களால் ஆன மாலை (*)
- நாகப் பூநூல் (*)
- அழகிய வீரக்கழல்கள் (*)
- குட்டை இடையாடை (*)
- கால்களுக்கு செருப்பு (#)
- பக்கத்தில் பத்ரகாளி(#)
- வலது பக்கத்தில் ஆட்டுத் தலை, அஞ்சலி முத்திரையுடன் தக்கன்(#)
[ (#) - ஸ்ரீதத்வநிதியில் மட்டும் உள்ளது. (*) - காரணாகமத்தில் மட்டும் உள்ளது)
‘சில்ப ரத்தினம்’ என்ற நூல் வீரபத்திரரின் படிமம் எட்டுக் கைகளுடன் அமைக்கப்பட்டு, கணங்களால் சூழப்பட்டு, வேதாளத்தின் மீது அமர்ந்த நிலையில் அமைக்கப்பட வேண்டும் என்று விளக்கியுள்ளது. ‘சில்ப சங்கீரா’ என்ற மற்றொரு சிற்ப சாத்திர நூல் வீரபத்திரர் படிமம், சாத்வீகம், தமஸ், ரஜஸ் என்ற மூன்று குணங்களின் வெளிப்பாடாக அமைக்கப்பட வேண்டும் என்று விளக்கியுள்ளது. (2)
சிற்பங்கள்
வீரபத்திரர் விஜயநகர மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியதால் அவர்கள் காலத்தில் வீரபத்திரர் சிற்பம் கோயில்களில் சிறப்பான இடம் பெறலாயிற்று.(2) கி.பி. 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் வீரபத்திரர் படிமம் மேலும் சிறப்பான வளர்ச்சி பெற்றது. விரிஞ்சிபுரம், தேவிகாபுரம், மதுரை, தாடிக்கொம்பு, தாரமங்கலம், திருசெங்கோடு, பேரூர் மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் ஆளுயர வீரபத்திரர் தூண் சிற்பங்கள் காணப்படுகின்றன.
நான்கு கை வீரபத்திரர்
![]() |
| பெங்களூரு ஹளசூரு சோமேஸ்வரர் கோயில் நந்தித் தூண் சிற்பம் |
![]() |
| திருச்செங்கோடு வீரபத்திரர் |
- ஜடாமகுடம், மீசை, அணிகள்.கோபம் பொங்கும் கண்கள்.
- 4 கைகள். வலது பின் கை அமபை உருவியவாறு, வலது முன் கை வாளால் தட்சனைக் குத்தியவாறு; இடது பின் கையில் வில், முன் கையில் கேடயம்.
- முண்ட மாலை. காலணிகள், வீரக்கழல்கள்.
- காலடியில் மிதிபட்டு இரு கை தட்சன் வாளும் கேடயமும் ஏந்தி.
- பக்கத்தில் ஆட்டுத் தலையுடன் தக்கனது சிறு உருவம்.
- ஜ்வாலா மகுடம், நாகப் பூநூல், முண்ட மாலை, காலணிகள், வீரக்கழல்கள்.
- கோபம் பொங்கும் கண்கள், கோரைப் பற்கள், மீசை.
- 8 கைகள் - 2 கைகள் தக்கனைக் குத்தும் சூலத்தைப் பிடித்தவாறு; மற்ற 3 இடது கைகளில் கபால பத்திரம், கேடயம், மணி. மற்ற மூன்று வலது கைகளில் டமருகம், வாள், கிளி.
- காலடியில் மிதிபட்டு வாளும் கேடயமும் ஏந்திய இரு கை தட்சன் .
10 கை வீரபத்திரர்
![]() |
| ஆவுடையார்கோயில் |
தட்ச யாக அழிவுக் காட்சிகள்
![]() |
| வீரபத்திரர் சந்திரனை தரையில் இட்டுத் தேய்க்கும் காட்சி விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில் |
![]() |
| வீரபத்திரர் அக்னியின் நாக்குகளை வெட்ட துரத்தும் காட்சி விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில் |
![]() |
| வீரபத்திரர் இறுதியில் யாக குண்டத்தின் மேல் தக்கனின் தலையை துண்டாக்கும் காட்சி விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில் |
![]() |
| சிவன் ஆணைப்படி தக்கனுக்கு ஆட்டுத் தலையைப் பொருத்தும் கணம் திருவாலீஸ்வரம் (படம் நன்றி: விஜய் ஷங்கர் பட் TMVAS வாட்ஸப் குழு மூலம்) |
கோயில்கள்
நாட்டார் வழக்கில் வீரபத்திரர்
தமிழக கிராமங்களில் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார் வீரபத்திரர். பெரும்பாலும் இரு கைகளே கொண்டுள்ளார்.
![]() |
| வீரபத்திரர் செம்மனேரி, செஞ்சி அருகில் விழுப்புரம் மாவட்டம் |
ஆகம வீரபத்திரர் சிற்பங்களைப் போல பல கைகளுடன் வீரபத்திரரை அமைபதும் தற்போதைய நாட்டார் மரபில் காணப்படுகிறது.
![]() |
| வீரபத்திரர் மகா முனியப்பன் கோயில், ஊமையனூர் ஆத்துப்பாளையம், ஊத்தங்கரை வட்டம், தர்மபுரி மாவட்டம் (Balaji Srinivasan, CC BY-SA 2.0 <https://creativecommons.org/licenses/by-sa/2.0>, via Wikimedia Commons) |
ஏழு கன்னியருடன் வீரபத்திரர்
ஏழு கன்னியர் சிற்பத் தொகுதியில் அவர்களுடன் வீரபத்திரர் படிமம் அமைக்கப்படுவது மரபாகும். தமிழகத்தில் கி.பி 7ஆம் நூற்றாண்டில் மலையடிக்குறிச்சி குடைவரையில் இப்படிமம் அமைக்கப்பட்டது. (2)
தக்கன் யாகம்
வாயு புராணம், பாகவத புராணம், பத்ம புராணம், சிவபுராணம், லிங்க புராணம், ஸ்கந்த புராணம், கூர்ம புராணம், மத்ஸ்ய புராணம் ஆகிய புராணங்கள் தக்க யாகக் கதையைக் சில பல வேறுபாடுகளுடன் கூறுகின்றன. தமிழில் 12 ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் வீரபத்திரரை நாயகனாக வைத்து தக்க யாக பரணி என்னும் நூலை இயற்றி உள்ளார்.
தக்கன் நான்முகனது மானசபுத்திரன். அவன் நான்முகன் வலது கட்டை விரலில் இருந்து தோன்றியதாகவும் புராணக் கதை உண்டு. உலகை படைக்க நான்முகனுக்கு உதவும் பிரஜாபதி. வேத கால ஆதித்யர்களுள் ஒருவன். அவனது மனைவி பிரசூதி முதல் மனுவான சுயம்புவ மனு - ஷதரூபா வின் மகள். அவள் நான்முகனின் இடது கட்டை விரலில் இருந்து தோன்றியதாகவும் புராணங்கள் உண்டு. (3)
தக்கனுக்கும் பிரசூதிக்கும் பல மகன்கள். 60 மகள்கள். மகள்களில்
- 10 பேர் யமனை மணந்தனர்
- 13 பேர் காஸ்யப முனிவரின் மனைவியர் ஆயினர். இவர்களுக்குப் பிறந்தவர்களே தேவர்கள், அசுரர்கள், நாகர்கள், கருடன் முதலானோர்.
- அஸ்வினி முதலான 27 பேர் சந்திரனை மணந்து நட்சத்திரங்களாயினர்.
- 10 பேர் 4 மற்றவர்களை மணந்தனர். (3)
- ரதி மன்மதனையும், மற்றவர்கள் அரிஷ்டநேமி, வாஹுபுத்திரர், ஆங்கீரஸர், கிரிசஷ்வர் ஆகிய முனிவர்களையும் மணந்தனர்.
இவ்வாறு பெரும் வலிமையும் புகழும் செல்வமும் குடும்பமும் உடைய மூத்தோனாக விளங்கிய தக்கன், உலகம் பராசக்தியால் இயங்குகிறது என்று தன் தந்தை நான்முகன் மூலமாக அறிந்தான். தன் பெருமையை மேலும் பெருக்க எண்ணிய தக்கன் பராசக்தி தன் மகளாக பிறக்க வரம் வேண்டிப் பெற்றார். உமை இமயமலைச் சாரலில் ஒரு சங்கு வடிவில் தவம் செய்து கொண்டிருந்தாள். தட்சன் அந்த சங்கை கையில் எடுத்தபோது, அது ஒரு பெண் குழந்தையாக உருமாறியது. அவளுக்கு தாட்சாயணி (தக்கன் மகள்) என்று பெயரிட்டு வளர்த்து வந்தான் தட்சன். சதி என்றும் நாமம் உண்டு. தாட்சாயணி சிவன் மீது காதல் கொண்டு, தவமிருந்தார். அவளது சுயம்வரத்திற்கு தக்கன் சிவனை அழைக்கவில்லை. ஆனால், அவரை எண்ணி தாட்சாயணி காற்றில் வீசி எறிந்த மாலையை சிவன் அங்கு தோன்றி ஏற்று தாட்சாயணியை மணந்தார்.
ஒரு முறை தக்கன் கைலாயம் சென்றபோது சிவன் தன்னை எழுந்து நின்று வரவேற்கவில்லை என்பதால் சிவன் மீது கோபம் கொண்டான் தக்கன். பின்னாளில் அவன் ஒரு பெரும் யாகம் செய்தான். அதற்கு பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், முனிவர்கள், அவர்களது மனைவியர் என அனைவரையும் அழைத்திருந்தான். அனைவரும் வந்திருந்தனர். ஆனால், சிவன் மேல் இருந்த கோபத்தால் சிவனையும் தாட்சாயணியையும் அழைக்கவில்லை. தாட்சாயணி வருத்தம் கொண்டு சிவன் தடுத்தும் கேளாமல் தன் தந்தையிடம் முறையிட்டு சிவனை அழைக்க வைக்க யாகத்திற்குச் சென்றாள்.
தக்கன் சிவனை இழித்துப் பேசி தாட்சாயணியையும் அவமானப் படுத்தினான். தாட்சாயணி யாக குண்டத்தில் வீழ்ந்து மாண்டு போனாள். அது அறிந்து தாங்கொணா துயரமும் கோபமும் கொண்ட சிவன் ருத்ர தாண்டவமாடினார். அப்போது விரிந்து பறந்த அவரது ஜடாமுடியின் ஒரு கற்றையை பிடுங்கி தரையில் அடிக்க அதிலிருந்து அவரது அம்சமாக வீரபத்ரரும், பத்ரகாளியும் வெளிப்பட்டனர். சிவன் அவர்களை தன் கணங்களுக்கு தலைமை ஏற்றுச் சென்று தக்கன் யாகத்தை அழித்து அவனையும் கொல்லக் கட்டளையிட்டார்.
வீரபத்ரரும், பத்ரகாளியும் தலைமை தாங்கிச் சென்ற படை தக்கனின் படையை வென்று முன்னேறியது. யாகத்தை நடத்திக் கொண்டிருந்த பிருகு முனிவர் தன் தவ வலிமையால் ஒரு படையை உருவாக்கி அனுப்பினார். அதுவும் தோற்றோடியது. யாகத்தின் தொடக்கத்தில் தக்கன் விஷ்ணுவை யாக காவலராக நியமித்திருந்தான். அந்தக் கடமையால் கட்டுண்டிருந்த திருமால் தேவர் படைக்கு தலைமை ஏற்று யாகத்தைக் காக்க வீரபத்திரரோடு போரிட வேண்டியதாயிற்று. கடும் போருக்குப் பின்பு திருமால் தோற்று வைகுண்டம் மீண்டார்.
வீரபத்திரர் யாகத்தில் பங்கு கொண்டோரை கொன்றும் வெட்டியும் தண்டித்தார். பிரம்மா தலைகளில் குட்டுப்பட்டார். கலைவாணியின் மூக்கு உடைந்தது. குயிலாக மாறி தப்பியோட முயன்ற இந்திரன் பிடிபட்டு சிறகுகள் சிதைக்கப்பட்டான். சந்திரன் காலால் தேய்வுற்றான். சூரியனின் பற்கள் உடைந்தன. அக்னியின் நாக்குகள் வெட்டுண்டன. பிருகுவின் தாடி பிடுங்கப்பட்டது. இறுதியில் தக்கன் தலையை வெட்டி யாக குண்டத்தில் வீசி எரித்து யாகத்தை அழித்தார் வீரபத்திரர்.
யாகத்தைப் பாதியில் நிறுத்தினால் பிரபஞ்ச சீர்கேடு ஏற்படும் என்று அஞ்சிய நான்முகனும் திருமாலும் சிவனுக்கு ஆறுதல் கூறி அழைத்து வந்தனர். சிவனும் கோபம் தணிந்து தேவர்களுக்கு முன்பிருந்த தோற்றங்களைத் தந்தருளினார். தக்கன் தலை எரிந்து போனதால் அவனுக்கு ஆட்டுத் தலை கிடைத்தது. யாகம் தொடர்ந்து நடந்து முடிந்தது.
ஆனால், சிவன் துயரம் தணியாமல் தாட்சாயணியின் எரிந்த உடலைத் தூக்கிக் கொண்டு உலகில் திரிந்தார். உலக நன்மைக்காக சிவனைத் தன்னிலை பெறச் செய்ய, திருமால் தன் ஆழியால் தாட்சாயணியின் உடலை பல துண்டுகளாக வெட்டினார். அத்துண்டுகள் சிதறி பூமியில் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
துணை
(1) Gopinatha Rao, T.A; Elements of hindu iconography - vol 2 - part 1; p186,187; 1st Ed; 1914
(3) Daksha; Wkipedia












Comments
Post a Comment