காலனைக் கடிந்த பெம்மான், கால சம்ஹார மூர்த்தி

நான் கீழ்கண்ட காலனைக் கடிந்த பெம்மான் சிற்பத்தைப் பார்த்தது கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள அருங்காட்சியகத்தில். 29/10/2019 அன்று. நுழைவாயிலை அடுத்த முன் கூடத்தில் இருந்தது சிற்பம். அருங்காட்சியகத்தில் உள்ள முதன்மையான காட்சிப்பொருட்களில் இதுவும் ஒன்று. இந்த சிற்பம் பட்டடக்கல் விருபாக்ஷர் கோயிலில் இருந்து கிடைத்தது. 8 ஆம் நூற்றாண்டு, சாளுக்கியர் கலை. 

காலனைக் கடிந்த பெம்மான்
(கால சம்ஹார மூர்த்தி, காலாரி)
பாதாமி அருங்காட்சியகம்

சிற்பத்தில் சிவனும் காலனும் உள்ளனர். சிவன் காலனை உதைத்து கீழே தள்ளி சூலத்தால் குத்தும் காட்சி. சூலத்தின் மும்முனையால் அல்லாது அதன் தண்டின் அடி நுனியால் குத்துவது சாளுக்கியர் சிற்பங்களில் காணப்படுவது. அவர்களது மகிஷாசுரமர்த்தினி படிமத்திலும் இவ்வாறே காணப்படுகிறது. சிவன் சூலத்தை வலுவாக ஏந்தியுள்ள முறை கவனிக்கத் தக்கது. 

சிவன் 
சிவன் ஜடாமகுடத்திற்கு பதில் கிரீட மகுடம் அணிந்துள்ளார். அதன் இடப்புறம் பிறைச்சந்திரன். கழுத்தில் சரப்பள; கரங்களில் கைவளை, தோள்வளை; இடையில் உத்தரபந்தம், அரைப்பட்டிகை  அணிந்து இடையாடை உடுத்தியுள்ளார். நான்கு கரங்களில் இரண்டு சூலத்தை ஏந்தியுள்ளன. வலது கரம் ஒன்று இடுப்பில். மற்ற இடது கரத்தில் உள்ளது என்ன என்று தெரியவில்லை. 

காலன் (எமன்)
மண்டியிட்டு கீழே கிடக்கும் காலனது தலையும் மேல் மார்பும் சூலத்தின் தாக்குதலால் பின் சாய்ந்துள்ளன. அந்த வேகத்தில் முடிகலைந்து பறப்பது முகத்திற்கு இடது பக்கம் தெரிகிறது. விரிந்து வெறித்த கண்கள். கோரைப்பற்களுடன் திறந்த வாய். நிலை தடுமாறி இடது கையை கீழ் ஊன்றியுள்ளான். மகுடம் தவிர சிவனைப் போன்ற அணிகள் அணிந்துள்ளான்.

புராணம் 

சிவன் காலனைத் தாக்கக் காரணம் என்ன? மார்க்கண்டேயன் என்ற 16 வயது சிறுவன்தான்.

மிருகண்டு என்ற முனிவரும் அவரது மனைவி மருத்துவவதியும் குழந்தைப் பேறு வேண்டி சிவனைத் தொழுதனர். சிவன் மனம் கனிந்தார். ஆனால், ஒரு திருவிளையாடல் நிகழ்த்த மனம் கொண்டு அவர்களுக்கு இரு தெரிவுகளை முன்வைத்தார். அறிவும், ஒழுக்கமும் நிறைந்த 16 ஆண்டுகளே வாழும் மகனா? அல்லது இவை இன்றி நீடு வாழும் மகனா? மிருகண்டு முதல் தெரிவையே வேண்டினார். மார்க்கண்டேயர் பிறந்தார். இளம் பிராயத்திலேயே கற்கவேண்டியன அனைத்தையும் கற்று அறிஞராகவும், ஒழுக்கம் நிறைந்தவராகவும், சிவ பக்தராகவும் திகழ்ந்தார். 

16 ஆண்டுகள் முடியும் தருவாயில் தன் பெற்றோரிடமிருந்து சிவனது வரத்தைப் பற்றியும், தன் மரணம் அணுகிவிட்டதையும் அறிந்தார். 16 ஆண்டுகள் நிறைவுற்றபோது அவரது பெருமை கருதி காலனே தன் எருமை வாகனம் மீது அமர்ந்து அவரை விண்ணுலகம் அழைத்துச் செல்ல வந்தான். மார்கண்டேயரோ சிவலிங்கத்தைக் கட்டித் தழுவிக்கொண்டு காலனுடன் செல்ல மறுத்தார். கடமை தவறாத காலன் அவரை நோக்கித் தன பாசக் கயிற்றை வீச அது சிவலிங்கத்தின் மீதும் பட்டது. தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிம்மரைப் போல லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவன் காலனை உதைத்து கீழே தள்ளி சூலத்தால் வதைத்தார். காலனின்றி மரணம் இல்லை, இயற்கையின் சமநிலை குலையும் என மண்மகள் வேண்ட சிவன் காலனை உயிர்ப்பித்தார். காலனது கடமைக்குப் பங்கம் வராமல் மார்கண்டேயருக்கு வயது 'என்றும் 16' என்று வரமளித்தார்.

சிற்பங்கள்

சூலம் ஏந்திய நான்கு கை சிவன் இரண்டு கை காலனை காலால் எத்துவதுதான் இந்த சிற்பத்தின் சுருக்கமான விளக்கம். 
எமன் நின்றுகொண்டோ, எருமையின் மீது அமர்ந்தவாறோ, மண்டியிட்டோ, சிவன் காலடியில் மிதிபட்டோ காட்டப்படலாம்.
கால சம்ஹார மூர்த்தி சூலம் ஏந்திய வடிவம். சிவனது வலது முன்கை ஏந்தியிருக்கும் சூலம் கீழ் நோக்கித் திரும்பி காலனை குறி வைத்திருக்கும்.  பின் வலது கையில் வழக்கமான மழு. இடது பின் கை விஸ்மயா என்னும் வியப்புக் குறி காட்ட, இடது முன் கை சூசி முத்திரை கொண்டு காலனைச் சுட்டும். சூலம் தவிர மற்ற கை ஆயுதங்கள், முத்திரைகள் மாறலாம்.
லிங்கத்தைக் கட்டி அணைத்துக் கொண்டுள்ள மார்கண்டேயர் சூழ்ந்துள்ள பாசக்கயிறுடன் அதே சிற்பத்தில் இடம் பெறலாம் அல்லது பக்கத்தில் தனியாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

கால சம்ஹார மூர்த்தி - தூண் சிற்பம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
உண்ணாமுலையம்மன் சன்னிதி முன் மண்டபம்
Source: Tamil Heritage Foundation, https://thfcms.tamilheritage.org/2-8/

இக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் 
கால சம்ஹார மூர்த்தியின் தனிச் சிற்பமும் உள்ளது.

காலாரி
(படம் நன்றி: TMVAS வாட்ஸ் அப் குழு)




















Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

திருமாலின் 24 வடிவங்கள்

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்