ஏழு கன்னியர் - சப்த மாதர்
அரகண்டநல்லூர் ஒப்பிலாமணீசுவரர் கோயிலின் முதல் திருச்சுற்று மண்டபம் 'திருநடை மாளிகை'. அதன் தெற்குப் பகுதியில் மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது ஏழு கன்னியர் சிற்பத் தொகுதி. சிவன் கோயில்களில் அவ்வாறு அமைவது மரபு. ஏழு கன்னியரது வலது புறம் வீரபத்திரரும் இடது புறம் விநாயகரும் இருப்பர்.
யோக பட்டத்துடன் யோகாசனத்தில் வீரபத்திரர்
- அக்க மாலையும், கமண்டலமும் ஏந்திய நான்கு முக பிராம்மி
- மழுவும் மானும் தாங்கிய மகேசுவரி
- சக்தி ஆயுதமும், இருதலைச் சூலமான வஜ்ராயுதமும் கொண்ட கௌமாரி
- ஆழியும், சங்கும் சூடிய வைஷ்ணவி
- தண்டம், கலப்பைகளை கையில் எடுத்த பன்றி முக வராகி
- வஜ்ராயுதமும், அம்பும் சுமந்த இந்திராணி
- பின் கைகளில் உடுக்கை, பாசமும், முன்கைகளில் சூலம், மண்டையோடும் வைத்திருக்கும் சாமுண்டி.
முன் அறுவரும் முன் வலது கை அபயம் காட்ட, முன் இடது கையை தொடைமீது வைத்துள்ளனர்.
விநாயகர் சிற்பம் படத்தில் காட்டப்படவில்லை.
தோற்றம்
கன்னியர் எழுவரும் ஆண் கடவுளரது துணைவியர் அல்ல. இந்திராணி இந்திரனின் மனைவி அல்ல. மகேசுவரி சிவனின் மனைவி அல்ல. அவர்கள் எழுவரும் கடவுளரது கூறுகள் (அம்சங்கள்) ஆவர்.
- பிராம்மி - பிரம்மாவின் கூறு
- மகேசுவரி - சிவனின் கூறு
- கௌமாரி - முருகனின் கூறு
- வைஷ்ணவி - திருமாலின் கூறு
- வராகி - வராகரின் கூறு (யமனின் கூறு என்போரும் உண்டு}
- இந்திராணி - இந்திரனின் கூறு
- சாமுண்டி - ருத்திரனின் கூறு (யமனின் கூறு என்போரும் உண்டு}
ஏழாவது கன்னி காளி என்ற கூற்றும் உண்டு. சிலப்பதிகாரத்தில் "அறுவருக்கு இளைய நங்கை. ........... காளி " என்ற குறிப்பு வருகிறது. அபிதான சிந்தாமணியும் ஏழாவது கன்னியாக காளியை குறிக்கிறது. சிலப்பதிகார காலத்திற்குப் பிறகு காளை தனித் தெய்வமாக உயர்வு பெற்று அவர் இடத்திற்கு சாமுண்டி வந்தார்.
ஏழு கன்னியர் போர்ப் பெண்கள் ஆவர். அசுரர்கோளோடு நடந்த யுத்தத்தில் முதன்மை தெய்வங்களுக்குத் துணை புரிய தோன்றியவர்கள். ஆனால் எந்தப் போரில் என்பது பற்றி புராணங்கள் மாறுபடுகின்றன.
- அந்தகாசுரனுடனான போரில் சிவனுக்குத் உதவ (வராக புராணம்)
- சும்ப-நிசும்பர்களுடனான போரில் துர்கைக்குத் துணை புரிய (மார்க்கண்டேய புராணம்)
- நைரிதனுடனான போரில் பிரம்மனுக்கு உதவ (சுப்ரபேதாகமம்)
சிற்பம்
- தனித்தனிக் கற்களிலோ, ஒரே கல்லிலோஅமைக்கப்படும்.
- பெரும்பாலும் அமர்ந்த நிலையில் இருந்தாலும், நின்ற, நாட்டிய நிலைச் சிற்பங்களும் உண்டு.
- அமர்ந்த நிலையில் சுகாசனம், பத்மாசனம், உத்குடிகாசனம், இரு கால்களையும் தொங்கவிட்ட நிலை என பல நிலைகளில் சிற்பங்கள் காணப்படுகின்றன.
- பொதுவாக நான்கு கைகள் - முன்னிரண்டு காக்கும், அருளும் (அபய, வரத) கைகளாக அமைய பின் இரண்டு கைகள் முதலில் கண்டவாறு ஆயுதங்கள் தாங்கும். இரு கைகள் மட்டுமோ, சிலருக்கு இரு கைகளும் சிலருக்கு நான்கு கைகளும் அமைவதும் உண்டு.
- சில சிற்பங்களில் பீடத்திலோ காலருகிலோ அவரவர் வாகனங்கள் இருப்பதுண்டு. கன்னியரின் வாகனங்களும், ஆயுதங்களும் அவர்களது மூல தெய்வங்களுடையனவே.
- வீரபத்திரர் - ரிஷபம்
- பிராம்மி - அன்னம்
- மகேசுவரி - சிங்கம்
- கௌமாரி - மயில்
- வைஷ்ணவி - கருடன்
- வராகி - சேஷன்/ எருமை
- இந்திராணி - யானை
- சாமுண்டி - பிணம்/ஆந்தை
- விநாயகர் - மூஞ்சூறு
- சிற்பங்களில் கொடிகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. அவற்றில் வாகனங்களே இடம் பெற்றிருக்கும்.
- பிராம்மியை நான்முகங்களாலும், வராகியை பன்றி முகத்தாலும், சாமுண்டியை வற்றிய என்பு தோல் போர்த்த உடலாலும் அடையாளம் காணலாம். மற்றவர்களை அவர்களது ஆயுதங்கள், வாகனங்கள், வரிசை நிலை கொண்டே அடையாளம் காண முடியும்.
ஏழு கன்னியர் - சப்த மாதர்
மேற்கூறிய வைதீக தொடர்புடைய, ஏழு வெவ்வேறு உருவங்களுடைய பெண் தெய்வங்களை சப்த மாதர்கள் எனவும் வைதீக தொடர்பற்ற, அருவமாக கற்களாகவும் அல்லது ஒரே உருவமுடைய ஏழு பெண் தெய்வங்கள் ஏழு கன்னியர் அல்லது கன்னிமார் எனப்படும் நாட்டார் தெய்வங்களாகவும் கருதப்படுகின்றனர்.கன்னிமார் வழிபாடு வளமைச் சடங்கை அடிப்படையாகக் கொண்டது. வேப்ப மரம், புளிய மரம் போன்ற ஏதாவது ஒரு மரத்தடியில் மேடை மீது ஏழு சிறு கற்களும், சற்று பெரிய கல் ஒன்றும் இருக்கும். சிறு கற்கள் கன்னிமார் என்றும், பெரிய கல் கருப்பராயன் என்றும் வழிபடப் படுகின்றன.
கன்னிமாருக்கு பொங்கல் வைத்தும் கருகமணி, கருவளையம் வைத்து வழிபடுதல் மரபு. நாகை மீனவர்கள் கிராமங்களில் வீடுகளின் பின்புறத்தில் 7 செங்கல் வைத்து அந்த குடும்பத்து விஷேச நிகழ்ச்சிக்கு முன் கருப்புதுணி முறத்தில் கருகமணி,பழங்கள், வெண்பொங்கல் வைத்து வேற்று மனிதர்களை காண விடாமல் வழிபடுகின்றனர். வெள்ளி , செவ்வாய்கிழமைகளில் மாலை இருளுக்கு முன் அகல் விளக்கேற்றி வழிபடுவர். (மங்கை ராகவன்)
கன்னிமார் வழிபாட்டிற்கு தனி மந்திரங்களோ, வழிபாட்டு சடங்குகளோ இல்லை. வயல்வெளிகளிலும் வாய்க்கால், கிணறு ஆற்றங்கரைகளிலும் கன்னிமார் நாகர்களுடன் இருப்பதுண்டு.
சிவனைப் பிரிந்து மண்ணுலகில் பிறந்த பார்வதி சிவனிடம் மீண்டும் கூட கடும் தவம் புரிந்து வருகையில் வியர்வையை வழித்து எறிந்தார். அது 7 துளிகளாகத் தெரித்து ஏழு கன்னியர் எனும் கன்னிமார் ஆனது என தோன்றிய வரலாறு கூறப்படுகிறது. கன்னியரை வழிபட்டால் ஒன்று பத்தாக விளையும். கன்னியரை வழிபடுபவரையும் அவர்களுடைய குடும்பத்தையும் தான் அடிமையாக இருந்து காப்பாற்றுவதாக உறுதி கூறுகிறார் அன்னை பார்வதி.
அருவமான கற்கள் மட்டும் இன்றி, ஒத்த பெண் உருவங்கள் உடைய எழுவராகவும் கன்னியர் வழிபடப்படுகின்றனர்.
சிற்பங்கள்
நின்ற நிலையில் ஏழு கன்னியர்
![]() |
| வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி: தேசிய அருங்காட்சியகம், புது தில்லி |
https://commons.wikimedia.org/w/index.php?curid=32743578
- கன்னியர் இயல்பாக நின்றிருக்கின்றனர். சாமுண்டி நடன நிலையில் உள்ளார்.
- வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரது வாகனங்கள் - எருமை, யானை, நரன் அவர்கள் கால் அருகில் அல்லது அடியில் உள்ளனர். வைஷ்ணவியின் வலது புறம் கை கூப்பியவாறு இருப்பது கருடனா?
- வைஷ்ணவி, வராகி அருகில் பணிப்பெண்கள் கையில் பூவுடன்
- இந்திராணி, சாமுண்டி காலருகே குழந்தைகள்
- காலடியில் தாமரைப் பீடம், தலை பின்னால் தாமரை வட்டம்.
- சாமுண்டியின் பின் கைகள் தாழ்ந்திருக்க முன்கைகள் உயர்ந்துள்ளன. மற்றவர்கள் முன் கைகள் தாழ்ந்திருக்க பின் கைகள் உயர்ந்துள்ளன. ஆயுதங்கள்: (பின் வலது, இடது; முன் வலது, இடது) - வைஷ்ணவி - ஆழி, மழு?; அருள்கை, சங்கு. வராகி - கப்பரை, மணி; வாள், ?. இந்திராணி - வஜ்ரம், ?; சுட்டும் கை, ?; சாமுண்டி - கப்பரை, அதை தொட்டபடி; குத்துவாள், {உடைந்துள்ளது) ?சூலம்.
- கணுக்கால் வரையான மெல்லிய இடையாடை.
- வைஷ்ணவியும், இந்திராணியும் கிரீட மகுடம் அணிந்துள்ளனர். சாமுண்டி - ஜடா மண்டலம். வேறுபட்ட காதணிகள். கழுத்தில் சரப்பளி, நீண்ட மணி மலை; வேலைப்பாடமைந்த தோள் வளை, கை வளைகள்; இடையில் மேகலை, குரங்குச் செறி; கால் வளை; வைஷ்ணவிக்கு கணுக்கால்வரை தொங்கும் மலர்மாலையும், சாமுண்டிக்கு இரட்டை வட முத்து மாலையும்.
- தெளிவான புருவங்கள், புன்னகை கொண்ட அழகிய முகம், தடித்த கீழ் உதடுகள்.
வலப்புறம் சிவன், இடப்புறம் விநாயகருடன் அவரவர் வாகனங்கள் நோக்க ஏழு கன்னியரும் கூத்தாடும் காட்சி.
![]() |
| 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மத்திய பிரதேசச் சிற்பம். |
Los Angeles County Museum of Art, U.S.A; By Ms Sarah Welch – Own work, CC BY-SA 4.0,
https://commons.wikimedia.org/w/index.php?curid=44761691
மேலை சாளுக்கியர்கள் கால ஏழு கன்னியர் (6 ஆம் நூற்றாண்டு)
வட கர்நாடகத்தில் மேலை சாளுக்கியர்களது (பொ ஆ 543 - 757) தலைநகரமாயிருந்த பாதாமிக்கு அருகில் உள்ளது கோயில் நகரமான ஐஹொளே. அங்குள்ள 6 ஆம் நூற்றாண்டு ராவணபாடி குடைவரையில் உள்ள சிற்பம் இது. ஒரு பக்க மண்டபத்தின் மூன்று சுவர்களையும் நிறைக்கிறது.
சிவனின் இடப்புறம் உமையும், வலப்புறம் வைஷ்ணவியும் உள்ளனர். வலது சுவரில் பிராம்மி, மகேசுவரியும், கௌமாரியும் இடது சுவரில் வராகி, இந்திராணி, சாமுண்டியும் உள்ளனர். பிராம்மியை வெளித்தெரியும் மூன்று முகங்களாலும், கையில் உள்ள அக்க மாலை, கெண்டியாலும் அடையாளம் காணலாம். வராகியை பன்றி முகத்தாலும்,.சிவனது இடப்பக்கம் அமைவதால் உமையையும் அறியலாம். பிராமியைத் தவிர மற்றவர்கள் ஆயுதங்கள் இன்றி இருப்பதால் அவர்களை வரிசைநிலை கொண்டு அறியலாம். கௌமாரிக்கும், வராகிக்கும் இடையே மூலையில் மேலே உடல் வற்றிய பிருகு முனிவர்.
வட கர்நாடகத்தில் மேலை சாளுக்கியர்களது (பொ ஆ 543 - 757) தலைநகரமாயிருந்த பாதாமிக்கு அருகில் உள்ளது கோயில் நகரமான ஐஹொளே. அங்குள்ள 6 ஆம் நூற்றாண்டு ராவணபாடி குடைவரையில் உள்ள சிற்பம் இது. ஒரு பக்க மண்டபத்தின் மூன்று சுவர்களையும் நிறைக்கிறது.
![]() |
| நடன சிவன், விநாயகர், முருகன் - ஐஹொளே ராவணபாடி குடைவரை |
- திரிபங்க நிலை. வலது திருவடி உடைந்துள்ளது. நெற்றிக்கண். மோன நிலையில் முகம்.
- பத்து கைகள். மேலிரு கரங்களில் படமெடுக்கும் பாம்பு. வலது முன்கை காக்கும் கை. இடது முன்கை தும்பிக்கையாய் (கஜ ஹஸ்தம்) நீண்டிருக்க, அதன் பின் கை ஊரு ஹஸ்தமாய் தொடை மேல் பதிந்துள்ளது. மற்ற மூன்று வலக்கைகளில் ஒன்றில் சிறு உடுக்கை. ஒன்றில் ஆயுதத்தின் பிடி தெரிகிறது, ஆனால் ஆயுதம் தெளிவில்லை. மற்ற கை சிதைந்துள்ளது. மற்ற இடக்கரங்கள் இரண்டின் குறிப்புகள் தெரியவில்லை.
- வழக்கமான ஜடாமகுடத்திற்கு பதிலாக கிரீட மகுடம் சூட்டியுள்ளார். அதன் வலப்புறம் பிறைச்சந்திரன்.
- ஒரு பாம்பு இடது தோளிலிருந்து பூணூல் போல கீழிறங்கி விநாயகர் தலைக்கருகில் படமெடுத்துள்ளது. ஒரு மணிமாலை இடது தோளிலிருந்து கணுக்கால்வரை இரு கால்களுக்கிடையே தொங்கி பின் இடுப்பின் வலது பக்கமாக பின்புறம் சென்று மறைகிறது.
- தோள்வளைகள், பட்டையான இருபக்கமும் மணிகள் பொதிந்த சூடகக் கைவளைகள், உதர பந்தம், பாம்பால் ஆன இடைக்கட்டு,
- சிவனது காலருகில் வலப்பக்கம் விநாயகர், இடப்பக்கம் முருகன். முகம் சிதைந்துள்ள முருகன் கழுத்தில் புலிப்பல் ஒன்று தொங்குகிறது.
![]() |
| பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி - ஐஹொளே ராவணபாடி குடைவரை |
![]() |
| உமை, வராகி, இந்திராணி, சாமுண்டி.- ஐஹொளே ராவணபாடி குடைவரை |
சிவனின் இடப்புறம் உமையும், வலப்புறம் வைஷ்ணவியும் உள்ளனர். வலது சுவரில் பிராம்மி, மகேசுவரியும், கௌமாரியும் இடது சுவரில் வராகி, இந்திராணி, சாமுண்டியும் உள்ளனர். பிராம்மியை வெளித்தெரியும் மூன்று முகங்களாலும், கையில் உள்ள அக்க மாலை, கெண்டியாலும் அடையாளம் காணலாம். வராகியை பன்றி முகத்தாலும்,.சிவனது இடப்பக்கம் அமைவதால் உமையையும் அறியலாம். பிராமியைத் தவிர மற்றவர்கள் ஆயுதங்கள் இன்றி இருப்பதால் அவர்களை வரிசைநிலை கொண்டு அறியலாம். கௌமாரிக்கும், வராகிக்கும் இடையே மூலையில் மேலே உடல் வற்றிய பிருகு முனிவர்.
- எண்மரும் இருகரம் கொண்டுள்ளனர். வெவ்வேறு நிலையில் நின்று சிவநடனம் காண்கின்றனர். சாமுண்டி மட்டும் நடனமாடுகிறார்.
- உயரமான மகுடங்களில் வேலைப்பாடுகள் வேறுபடுவது மட்டுமல்ல, மகேசுவரியின் மகுடத்தில் பிறைச்சந்திரனும், சாமுண்டியின் மகுடத்தில் கபாலமும் அமைந்து அவர்கள் அடையாளத்தை உறுதி செய்கின்றன.
- வேறுபட்ட கீழாடைகள், காதணிகள்.
- சரப்பளி போன்ற கழுத்தணிகள், தோள்வளைகள், முழங்கை நிறைய வளைகள், சன்னவீரம், மேகலை. சாமுண்டி மட்டும் சன்ன வீரத்திற்கு பதிலாக வலது தோளிலிருந்து இடது இடை வரையான பட்டையான ஆபரணம் ஒன்றை அணிந்திருக்கிறார், மேகலையும் இல்லை.
- சிவன், எட்டு பெண்கள், இரு குழந்தைகள் இவர்களில் உமையைத் தவிர மற்றவர்கள் காலிலோ, விரலிலோ அணிகள் இல்லாமை குறிப்பிடத் தக்கது. உமையின் காலில் மட்டும் அணிகள் உள்ளன.
![]() |
| குடும்பமும் ஏழு கன்னியரும் காண நடனமாடும் சிவன் முழு சிற்பத் தொகுதி - ஐஹொளே ராவணபாடி குடைவரை |
எல்லோரா குடைவரை ஏழு கன்னியர்
மகாராஷ்டிர மாநிலத்தில் அவுரங்காபாத் அருகில் உள்ள எல்லோரா குடைவரைகளில் எண் 14, 16, 21, 22 ஆகிய குடைவரைகளில் ஏழு கன்னியர் சிற்பங்கள் உள்ளன.
குடைவரை 21 (பொ ஆ 6 ஆம் நூற்றாண்டு)
![]() |
| சிவநடனம் காணும் ஏழு கன்னியர்; எல்லோரா குடைவரை 21 (ராமேசுவரர் குடைவரை) |
இது காலச்சூரி அரசர்கள் காலத்தில் குடையப்பட்டது. குஜராத், மகாராஷ்ட்ரா, மேற்கு மத்திய பிரதேசப் பகுதிகள் இவர்கள் ஆட்சி இடம். மஹிஷ்மதி இவர்கள் தலைநகர். பொ ஆ 550 முதல் சுமார் 75 ஆண்டுகள் மூன்றே அரசர்கள் ஆண்ட சிறிய வம்சம். ஆனால் இவர்கள் பெயர் எலெகஃபண்டா, எல்லோரா குடைவரைகள் மூலம் நிறுவப்பட்டுவிட்டது.
குடைவரை 14 (பொ ஆ 6 ஆம் நூற்றாண்டு)
![]() |
| ஏழு கன்னியர் விநாயகருடன்: எல்லோரா குடைவரை 14 (ராவண் கா காய்) |
Burgess, James (1832-1916) [Public domain]
மேற்கண்ட சிற்பத்தில் ஏழு கன்னியர் குழந்தைகளுடன் அன்னையராக இருக்கின்றனர். அவர்கள் வாகனங்களும் உள்ளன.
ஐஹொளே அருங்காட்சியக ஏழு கன்னியர் சிற்பம்
ஐஹொளே அருங்காட்சியகத்தின் வெளியே காட்சிப்படுத்தப்பட்டுள்ள சிற்பங்களில் சில ஏழு கன்னியர் தொகுதிகளும் உள்ளன. அவற்றில் ஒன்று:
![]() |
| ஏழு கன்னியர், வீணாதர சிவன், விநாயகர்; ஐஹொளே அருங்காட்சியகம் |
வீணாதர சிவனும், விநாயகரும் கன்னியரது இடப்பக்கம் ஒன்றாக இருப்பது இச்சிற்பத்தின் தனித்துவம். பீடத்தில் வாகனங்கள். இரு கரங்கள். ஆயுதம் தாங்கியவை.
மேலை கங்கர் கால ஏழு கன்னியர் (? 7 ஆம் நூற்றாண்டு)
மேலை கங்கர்கள் தலைக்காட்டை தலைநகராகக் கொண்டு தெற்கு கர்நாடகத்தை பொ ஆ 350 முதல் 1000 வரை ஆண்ட அரச பரம்பரை. தற்போதைய மைசூரு, ஹாசன், சாமராஜநகர், தும்கூரு, மாண்டியா , கோலார், பெங்களூரு மாவட்டங்கள் அவர்களது ஆட்சியின் கீழ் இருந்தது. அது கங்கவாடி என்று அழைக்கப்பட்டது. அவர்கள் ஆட்சியின் உச்சத்தில் தமிழகத்தின் கொங்கு பகுதிகளும், ஆந்திரத்தின் அனந்தப்பூர் பகுதியும் கூட அவர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. பெங்களூரு புறநகர்ப் பகுதியில் உள்ள பேகூரில் கண்டெடுக்கப்பட்ட மேலை கங்கர் கால ஏழு கன்னியர் சிலைகள் பெங்களூரு அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
- சுகாசனம்
- முன்கைகள் - சிவன் வீணை இசைக்கிறார். மற்றவர்கள் இடது முன் கை தொடை மீது உள்ளது.
- மற்ற கைகள்: (பின் வலது, இடது; முன் வலது ) சிவன் - மழு, நாகம்; பிராம்மி - ?, அக்க மாலை; ?. மகேசுவரி - நாகம், சூலம்; ?. வைஷ்ணவி - ஆழி, சங்கு; அருள்கை. வராகி - பாசம், சங்கு; ?. இந்திராணி - இரு கைகள் மட்டும், வலது கையில் வஜ்ரம்.
- மகேசுவரி மட்டும் பூணுலுக்குப் பதிலாக சன்ன வீரம் அணிந்திருக்கிறார்.
கல்யாணி சாளுக்கிய ஏழு கன்னியர்
வட கர்நாடகத்தில் தார்வார் மாவட்டம் லட்சுமேசுவரில் கிடைத்த 12 ஆம் நூற்றாண்டு கல்யாணி சாளுக்கிய சிற்பம்.
![]() |
| கல்யாணி சாளுக்கிய 12 ஆம் நுற்றாண்டுச் சிற்பம்; பெங்களூரு அருங்காட்சியகம் |
- இரு கால்களும் தொங்கவிட்டு அமர்ந்த நிலை
- வீரபத்திரர்/சிவன், விநாயகர் துணை இன்றி 7 கன்னியர் தனித்து இருக்கின்றனர்.
- மகேசுவரி, வைஷ்ணவி, சாமுண்டி மட்டும் நான்கு கைகள் கொண்டிருக்க மற்ற நால்வருக்கு இரு கைகள் மட்டுமே.
- ஆயுதங்கள்: பிராம்மி - அக்க மாலை, கெண்டி. மகேசுவரி - மழு, கபாலம், வாள், கேடயம். கௌமாரி - ?சக்தி, ?. வைஷ்ணவி - ஆழி,சங்கு; வாள், கேடயம். வராகி -தண்டம், கேடயம். இந்திராணி - வஜ்ரம், ?. சாமுண்டி -வெட்டுண்ட தலை, சூலம், வாள், கபாலம்.
- ஆண்மையும், வீரமும் ததும்பும் சிற்பங்கள். அருள்கையோ, காக்கும் கையோ இல்லாத போர்பெண்கள்..
ஒடிசா
பரசுராமேசுவரர் கோயில், புவனேசுவர்
6 ஆம் நூற்றாண்டு முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை கலிங்கத்தை ஆண்ட சைலோத்பவ அரசர்களின் ஆட்சி காலத்தில் 7 ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோயில்.
![]() |
| பிராம்மி |
https://commons.wikimedia.org/wiki/File:Bhubaneshwar_ei045.jpg?uselang=ru
![]() |
| மகேசுவரி |
https://commons.wikimedia.org/wiki/File:Bhubaneshwar_ei044.jpg?uselang=ru
![]() |
| கௌமாரி, வைஷ்ணவி |
https://commons.wikimedia.org/wiki/File:Bhubaneshwar_ei043.jpg?uselang=ru
![]() |
| இந்திராணி, வராகி |
https://commons.wikimedia.org/wiki/File:Bhubaneshwar_ei042.jpg?uselang=ru
![]() |
| சாமுண்டி, விநாயகர் |
https://commons.wikimedia.org/wiki/File:Bhubaneshwar_ei041.jpg?uselang=ru
![]() |
| ஏழு கன்னிகள்; முழு தொகுப்பு |
https://commons.wikimedia.org/wiki/File:Carvings_at_Parsurameswar_Temple,_Bhubaneswar_01.jpg
மேற்கண்ட சிற்பத் தொகுதியில் இந்திராணியும், வராகியும் இடம் மாறியுள்ளனர். சில பீடங்களில் வாகனங்கள் உள்ளன. சாமுண்டிக்கு ஆந்தை.
ஒடிசா - கட்டக்
கட்டக் மாவட்டத்தில் இருந்து கிடைத்த ஏழு கன்னியர் சிற்பங்களில் நான்கு புவனேசுவர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ளன.
சாமுண்டியைத் தவிர மற்ற கன்னியர் இடது தொடையில் குழந்தை ஒன்றை அமர்த்தி அணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எண் கன்னியர்
சில இடங்களில் பிள்ளையாரின் கூறாக விநாயகியும் அல்லது நரசிம்மரின் கூறாக நரசிம்மியும் கன்னியர் வரிசையில் இடம் பெறுவது உண்டு.
![]() |
| விநாயகி இரும்பேடு |
![]() |
| விநாயகி எலவாசனூர் கோட்டை |
மேற்கொண்டு
பல்வேறு இடங்களில் உள்ள ஏழு கன்னியர் சிற்பங்களின் படங்களைப் பார்க்கச் சொடுக்கவும்: https://commons.wikimedia.org/wiki/Category:Matrika
நன்றிக்கடன்
Catalogue of Sculptures; Government Museum, Bengaluru; Dept of Archeology Museum and Heritage; First Ed; 2015
https://en.wikipedia.org/wiki/Matrikas
https://en.wikipedia.org/wiki/Western_Ganga_dynasty
https://en.wikipedia.org/wiki/Aihole#Ravana_Phadi_cave
https://temple.dinamalar.com/Slogandetails.php?id=887
அபிதான சிந்தாமணி; ஆ சிங்காரவேலு முதலியார்; 3 ஆம் பதிப்பு; 1934; முதல் பதிப்பு 1910 (archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM9jupy.TVA_BOK_0009120 மூலம்)
புராணிக் என்சைக்ளோபீடியா; வெட்டம் மாணி; முதல் பதிப்பு (மலையாளம்) 1964; முதல் ஆங்கிலப் பதிப்பு 1975



































Comments
Post a Comment