கங்காதரர்

இறந்து விண்புக இயலாமல் தவித்துக்கொண்டிருந்த தன் முன்னோர்களின் ஆவிகளை கரையேற்றும் பொருட்டு இக்ஷுவகு குல மன்னன் பகீரதன் செய்தபெரு முயற்சியால் வான்நதி கங்கை மண்ணுக்கு வர சம்மதித்தாள். அவள் பெருவேகத்தை கட்டுப்படுத்த சிவன் அவளைத் தன் சடையில் ஏந்தி கங்காதர வடிவம் பெற்றான். பின் கங்காவிசர்ஜனராக கங்கையை மெதுவாக மண்ணில் வழியச் செய்தான். விரிவான கதையைக் இறுதியில் காண்க.

சிற்பம்

சிற்ப நூல்களில் கங்காதரரின் வடிவம் மட்டுமே விவரிக்கப்பட்டிருக்கிறது. கங்காவிசர்ஜனர் தனியாகச் சொல்லபடவில்லை.

சிவன் - கங்கை - பார்வதி - பகீரதன்

அம்சுத்பேதாகமம்

சிவன் - நின்ற நிலை - வல்து கால் நேராக, இடது கால் சற்று வளைந்து - வலது பின் கையை தலைக்கு மேல் உஷ்னிஷா வரை உயர்த்தி - அதால் ஒரு சடையை விரித்துப் பிடித்து, விழும் கங்கையை அதில் தாங்கியபடி - அந்த ஜடையின் மீது கங்கை - முன் வலது கையால் பார்வதியின் தாடையை ஏந்தி, முன் இடது கையால் அவளை அணைத்தபடி - இடது பின் கையில் மான்

சிவனின் இடது பக்கத்தில் பார்வதி - நின்ற நிலை - முகத்தில் கையறு நிலை (virahitanana) - இடது கால் நேராக, வல்து கால் சற்று வளைந்து - வலது கை டோல ஹஸ்தம் அல்லது துணி மடிப்புகளை பிடித்தபடி - இடது கை மடங்கி மலர் ஏந்தி - 

சிவனது வலது பக்கம் பகீரதன் - முனிவர்கள் சூழ - சிவனைப் போற்றியவாறு

மற்ற ஆகமங்கள் சிவனை 4 கைகளுடன் வலது முன் கை அபயம், இடது முன் கை கடகம், வலது பின் கை பரசு, இடது பின் கை மான். பகீரதன் உயரம் சிவனின் தொப்புள் அல்லது மார்பு அல்லது கழுத்து வரை - பகீரதனுக்கு மரவுரி ஆடை, கலைந்த சடைமுடி - இரு கைகள் அஞ்சலி - மார்பளவில் அல்லது தலைக்கு மேல் உயர்த்தி - ஜடை தாங்கிய கை காது வரை உயர்த்தி

எலிஃபெண்டா, மும்பை அருகில்
(ASI, World Heritage Series guide book; 2007 p 45)
  • காலசூரி வம்சத்தின் கிருஷ்ணராஜர் (பொ.ஆ. 550 - 575) திருப்பணி.
  • 13 அடி அகலம், 17 அடி உயரம் உடைய சிற்பம்.
  • சிவனின் ஜடையில் இறங்கும் மூன்று முக கங்கை (மூன்று முகங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் மூன்று நதிப்பெண்களைக் குறிக்கும் எனவும், கங்கையின் மூன்று நதிப்பிரிவுகளைக் (மந்தாகினி, சுராவதி, பாகவதி) குறிக்கும் எனவும் இரு கருத்துகள் உள்ளன.)
  • சிவனது வல்து பின் கை ஜடையை ஏந்தியவாறு, வல்து முன் கை கடகம், இடது இரு கைகளும் உடைந்துள்ளன.
  • பார்வதி புன்னகையுடன் சிவனின் இடது பக்கம்.
  • மேலே இக்காட்சியை காண வந்த தேவர்கள். வலப்பக்கம் நான்முகன், யானை மீது இந்திரன், பார்வதி தலையின் இடது பக்கம் கருடன் மீது அமர்ந்து திருமால்
  • சிவன் கால்களின் வலது பக்கம் கருடாசனத்தில் வணங்கியவாறு பகீரதன்.
  • சிவன், பார்வதி கால்களுக்கு இடையில் பாம்புடன் ஒரு சிவகணம்.

கங்காதரர் -
லளிதாங்குர பல்லவேஸ்வர கிருகம், திருச்சி மேல் குடைவரை

  • பல்லவ அரசன் முதலாம் மகேந்திர வர்மன் (பொ.ஆ 590 - 630) வெட்டுவித்தது. 
  • சிவன் காலடியில் முயலகனோ, சிவகணமோ லலிதாசனத்தில் சிவனது வலது பாதம் தாங்குகிறது.
  • மேலே இரு கந்தர்வர்கள் சிவனை போற்றிய நிலையில்
  • கீழே இருவர் கருடாசனத்தில் சிவனைப் போற்றியவாறு
  • இடையில் இரு முனிவர்கள் (வலது பக்கம் பகீரதன்?)
  • சிவன் வலது பின் கையில் நீட்டிய சடையின் மீது கங்கை
  • சிவன் வல முன் கையில் நாகம், இட முன் கை இடுப்பின் மீது கடி  ஹஸ்தமாய். இடது பின் கையில் அக்க மாலையா? 
  • இடது பின் கை மேல் நாய்
    பல பல்லவர் கால சிற்பங்களில் காணப்படும் இந்த நாய் எதைக் குறிக்கிறது என்று தெரியவில்லை. மயிலை சீனி வெங்கடசாமி குறித்து ஒரு விளக்கம் அளிக்கிறார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் முதல் திருச்சுற்று, மேற்குச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு சாசனத்தை அவர் துணை கொள்கிறார். நீண்ட அகவற்பாவாக அமைந்த அந்த சாசனத்தில் ஒரு பகுதி:
    ".............கண்ணுதற் பெருமான்
    ஆதிநாதன் நாய் வேடங் கொண்டு
    பாய்புனற் கங்கை ஆயிர முகங்கொண்டு
    ஆர்த்தெழு மன்னாள் ஏற்றுக் கொண்ட
    திருந்திய பிறைமுடி யருந்தவச் சடாதரர்."

    இதில் சிவன் கங்கையைத் தம்முடைய சடையில் ஏற்றுக்கொண்டபோது நாய் வேடமுங்கொண்டார் எனக் கூறப்படுகிறது. ஆகவே, இந்த நாய் உருவம் கங்காதர மூர்த்ததின் ஒரு கூறு என்பது தெரிகிறது. ஆனால், கங்கையை ஏந்திக் கொண்டதற்கும் நாய் உருவங் கொண்டதற்கும் என்ன தொடர்பு? கங்கை தன் பெருக்கால் புரி சடையை விட்டு வெளியே பாய்ந்தோடி வருவதைத் தடுக்க நாய் காட்டப்பட்டுள்ளது. புனிதமான கங்கையை நாய் தொடுதல் ஆகாதன்றோ அதனால் இருக்கலாம் என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.

ராவணபாடி குகைக்கோயில், ஐஹோளெ

  • மேலைச் சாளுக்கியர் கலை; 7 ஆம் நூற்றாண்டு
  • பகீரதன் - ஏலும்புக்கூடாய் இரு கைகளையும் உயர்த்தி ஒற்றைக் கால் தவம்
  • சிவன் - பின் இரு கைகளால் இரு சடைகளை ஏந்தியவாறு. வலது கை கடக ஹஸ்தமாய்; இடது முன் கை தொடையில் கடி ஹஸ்தமாய்.
  • கங்கை/ மூன்று நதிப் பெண்கள் சிவன் தலைமேல்
  • பார்வதி சிவனின் இடப்புறம்
  • அடியில் சிறு சிற்பத் தொகுதி - வலது பக்கம் சிவனும் பார்வதியும் காட்சி தர அவர்களை வணங்கும் பகீரதன் இடப்பக்கம். இடையில் ஒரு சிவ கணம் பாம்பை தூக்கி விளையாடியவாறு

கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்
(GANGADHARA MURTHY, CC BY-SA 4.0 <https://creativecommons.org/licenses/by-sa/4.0>, via Wikimedia Commons)

ராஜசிம்ம பல்லவன் (பொ.ஆ. 690 - 718) திருப்பணி.
  • சிவன் முகத்தில் உற்சாகம். இடது பின் கையில் வியப்புக் குறிப்பு (விஸ்மயா ஹஸ்தம்). வலது முன் கையில் மகிழ்ச்சிக் குறிப்பு (சிம்மகர்ண ஹஸ்தம்).
  • வலது முன் கை தொடை மீது கடி ஹஸ்தமாய் இருக்க இடது முன் கை ஜடையை ஏந்தி உள்ளது. 
  • வலது கால் நிலத்தில் நேராக நிலைத்திருக்க இடது கால் மடித்து பீடத்தின் மீது ஊர்த்துவ ஜானு நிலையில்
  • பார்வதி பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். வல்து கையை பீடத்தின் மீது நித்ரா ஹஸ்தமாய் ஊன்றி. இடது கை கடக ஹஸ்தம்.
  • பகீரதனும் கங்கையும் இல்லை.
மதங்கீசுவரர் கோயில், காஞ்சிபுரம்
படம் நன்றி: பாபு மனோ 
  • ராஜசிம்ம பல்லவன் திருப்பணி
  • சிவன் - பார்வதி - பகீரதன் - கங்கை (சிவன் முன் இடது கையால் நீட்டிய ஜடை மேல்) - வல்து மேல் புறம் ஒரு நாய்.
  • சிவன் வலது முன் கை கடகம், பின் கையில் அக்க மாலை, இடது பின் கை பார்வதியை அணைத்தபடி.

கங்கை கொண்ட சோழபுரம்
(CC BY-SA 3.0 <https://creativecommons.org/licenses/by-sa/3.0>, via Wikimedia Commons)
  • முதலாம் ராஜேந்திர சோழன் (பொ.ஆ. 1012 - 1044) காலத் திருப்பணி
  • சிவன் வலது முன் கையால் பார்வதியின் வலது முலையையும் இடது முன் கையால் அவள் இடது பக்க இடுப்பையும் அணைத்தவாறு.

படம் நன்றி: திரு சு. இராசவேலு)

சிவன் முன் இரு கைகளால் பார்வதியின் தாடையைஉம் இடுப்பையும் அணைத்தவாறு


கர்த்தரி முக ஹஸ்தத்தில் ஏந்திய ஜடையின் மீது அஞ்சலி ஹஸ்தத்துடன் கங்கை.

கங்காதரர் - முகலிங்கேஸ்வரர் கோயில், முகலிங்கம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஆந்திர பிரதேசம். 8-9 ஆம் நூ கீழை கங்கர் 

  1. பின் இடது கையில் அக்க மாலை. 
  2. பின் வலது கை சடை ஒன்றை நீட்டிப் பிடித்திருக்க முழு உருவ கங்கை தலை கீழாக அதில் விழுகிறாள். ? கைகளில் ஒரு மணி மாலை. 
  3. அந்த சடையில் இருந்து வேகம் தணிந்து கீழே கசிந்து நிலவுலக கங்கையாக சிவனின் இடதுபுறம் மகரம் மீது நிற்கிறாள்,
  4. சிவனின் வலது முன் கை வரதமாக கீழே நீள அதன் கீழ் கருடாசந்த்தில் அமர்ந்து வணங்கும் பகீரதன்.
  5. அவன் பக்கத் தூணில் ஜடாபந்தத்துடன் அர்த்த பத்மாசனத்தில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். இரு கைகளை உயர்த்தி மடக்கி முகம் அருகே வைத்திருக்கிறாள்.
  6. சிவன் இங்கும் விறைத்த குறியுடன் (ஊர்த்துவ ரேதஸை குறிக்கும் ஊர்த்துவ லிங்கம்) இருக்கிறார்.


பகீரதனின் கதை 

வால்மீகி ராமாயணம் பாலகாண்டம் சர்க்கம் 38 - 44 இல் விஸ்வாமித்திரர் ராமன் இலக்குவனுக்கு கூறுவதாக அமைந்துள்ளது. விஷ்ணு புராணம், பாகவத புராணத்திலும் விவரிக்கப்படுகிறது.

சகரர் ராமர் பிறந்த இக்ஷுவாகு குலத்து மூதாதையர்களுள் ஒருவர். அயோத்தியை தலைநகராகக் கொண்டு கோசல நாட்டை ஆண்டு வந்தார். அவர் தர்மத்தில் விருப்பங்கொண்டு பகைவரையடக்கும் வல்லமையடைந்து மஹாவீரனாகி விளக்கமுற்றிருந்தார். அவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவி விதர்ப்ப தேசத்தரசன் மகள் கேசினி. இளையவள் சுமதி. அரிஷ்டனேமி என்னும் காஸ்யப மகரிஷியின் புதல்வி. கருடனின் உடன்பிறப்பு. சகரர் பிள்ளைப்பேறு வேண்டி தன் இரு மனைவிகளுடன் இமையமலை அருகில் இருந்த ஒரு குன்றில் தவம் செய்தார். அக்குன்றில் மாமுனிவர் பிருகு குளித்து வருவதால் பிருகுபிரஸ்வரணம் என்ப்பெயர் பெற்றது.

நூறாண்டு தவத்திற்குப் பிறகு மாமுனிவர் பிருகு சகரர் முன் தோன்றினார்.  மனைவியர் இருவரின் முன்பு வரங்களாக இரு தேர்வுகளை முன் வைத்தார். தலைமுறையைத் தொடர ஒரு மைந்தன். வலிமையும், புகழும், மகிழ்ச்சியும் கொண்ட பல மைந்தர்கள். கேசினி முதல் வரத்தைத் தேர்ந்தாள். சுமதி 60,000 மக்களைப் பெற இரண்டாவது வரத்தை தேர்ந்தாள். 

கேசினிக்கு அஸமஞ்சன் என்னும் மகன் பிறந்தான். சுமதி சுரைக்காயைப் போன்ற ஒரு கர்ப்ப பிண்டத்தைப் பெற்றாள். அது உடைந்து 60,000 குழதைகள் வெளிவந்தன. அவர்களை தாதிகள் நெய்க்குடங்களில் வைத்து வளர்த்தனர். அஸமஞ்சன் ஊரிலுள்ள குழந்தைகளை சரயு நதியின் வெள்ளத்தில் போட்டு மகிழ்வது போன்ற தீச்செயல்களைச் செய்து வந்தான். ஊராரது முறையீடுகள் பெருக, சகரர் அவனை நாட்டைவிட்டு வெளியேற்றினார். அப்போது அவனுக்கு அம்சுமான் எனும் மகன் இருந்தான். அவன் தந்தையைப் போல் இல்லாமல் நல்லியல்புகள் பெற்றிருந்தான். கேசினியின் 60,000 மகன்களும் வரத்தின் படி வலிமையும், புகழும், மகிழ்ச்சியும் கொண்டவர்களாக வளர்ந்தனர்.

சகரர் அஸ்வமேத யாகம் ஒன்றைத் தொடங்கினார். யாகக் குதிரை சகரனின் மேலாண்மையை நிலை நாட்டும் பொருட்டு மற்ற நாடுகளை வலம்சென்று மீண்டது. அதற்குக் காவலாக சகரனின் பேரன் அம்சுமான் சென்றான். இந்திரன் ராக்ஷஸர்களுக்கு உரிய மாயையைக் கைகொண்டு யாவருமறியாது வேறு சரீரம் பூண்டு உத்கயம் நடக்க வேண்டிய தினத்தினன்று யாகக் குதிரையை அபஹரித்துக்கொண்டு போய்விட்டனன். 

காணாமல் போன யாகக் குதிரையைத் தேடி சகரன் தன் 60,000 மகன்களை அனுப்பினான். பூமியின் மேல் தேடினர். பூமியின் கீழ் தங்கள் நகங்களாலும், சூலம், கலப்பைகளாலும் பாதாளம் வரை தோண்டியும் தேடினர். தேவர்கள், தானவர்கள், கின்னரர்கள், ராக்ஷசர்கள், பிசாசர்கள், உரகர்கள் எனப் பலரையும் துன்புறுத்தி விசாரித்தனர். ஆனால் யாகக் குதிரை கிடைக்கவில்லை. பின்னர் உலகைத் தங்கி நிற்கும் திசை யானைகளான கிழக்கில் விருபாக்ஷம், தெற்கில் மகாபத்மம், மேற்கில் ஸௌமனசம், வடக்கில் பத்ரம் ஆகியவற்றை வணங்கிக் கடந்து பாதளத்தினுள் தோண்டித் தேடினர். இறுதியில் வடகிழக்கில் தோண்டியபோது திருமாலின் அம்சமான கபில முனிவரையும் அவர் அருகே யாகக் குதிரையையும் கண்டனர். கபிலரே யாகக் குதிரையைத் திருடியவர் என்று எண்ணி அவரைத் தாக்க முற்பட்டனர். அவர் பார்வையால் 60,000 பேரும் எரிந்து சாம்பலாயினர். 

யாகக் குதிரையைத் தேடிச் சென்ற மகன்கள் மீண்டு வராததால் தன் பேரன் அம்சுமானை அவர்களைத் தேடி சகரன் அனுப்பினான். யாகக் குதிரையையும் சாம்பலாகிக் கிடந்த தன் உடன்பிறந்தாரையும் அம்சுமான் கண்டான். வேதனையுடன் அவர்களுக்கு நீர்க்கடன் செய்ய முற்பட்டான். அப்போது இறந்தவர்களுடைய மாமனான கருடன் அவன்முன் தோன்றி, அவர்களுக்கு கங்கை நீரால்தான் நீர்க்கடன் செய்ய முடியும் என்றும், கங்கை நீரால் அவர்கள் சாம்பலை நனைத்தால்தான் அவர்கள் சொர்க்கம் புக முடியும் எனவும் கூறினான். 

அம்சுமான் யாகக் குதிரையை மீட்டுவந்தபின் அசுவமேத யாகம் நிறைவுற்றது. சகரருக்கு கங்கையை மண்ணுக்கு கொண்டுவரும் வழி தெரியவிலை. அவருக்குப் பிறகு, அம்சுமான் அரசன் ஆனான். அவன் மகன் திலீபன். உரிய நேரத்தில் திலீபனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு அம்சுமான் கங்கையை மண்ணுக்குக் கொண்டுவரவேண்டித்  தவம் செய்தான். 32,000 ஆண்டுகள் தவத்திற்குப் பிறகும் எண்ணம் ஈடேறாமல் விண்ணுலகம் அடைந்தான் அம்சுமான்.  30,000 ஆண்டுகள் நல்லாட்சி செய்த திலீபனும் தன் பாட்டன்களை உய்விக்கும் வழியைப்பற்றி ஓயாது எண்ணிக் கொண்டிருந்தான். அவனாலும் கங்கையை கொணர முடியவில்லை. 

திலீபனுக்குப்  பின் அவன் மகன் பகீரதன் அரசனானான்.  ராஜரிஷியாக விளங்கினான். சாம்பலாகிக் கிடக்கும் தன் மூதாதையர்களுக்காக கங்கையை மண்ணுக்கு கொண்டுவரத் தீர்மானித்தான். இமய மலைத்தொடரில் உள்ள கோகர்ண மலையில் தவம் செய்யத் தொடங்கினான். ஐயெரிகளுக்கு நடுவே நின்று, ஐம்புலங்களையும் அடக்கி, கைகள் இரண்டையும் உயர்த்தி, மாதம் ஒரு முறை மட்டுமே உண்டு. பகீரீதன் ஓயாது செய்த கடுந்தவம் பல்லாயிரம் ஆண்டுகள் நீடித்தது. இறுதியில் பிரம்மன் மனம் கனிந்து தேவகணங்கள் சூழ பகீரதன்முன் தோன்றி, "பகீரத மன்னனே, நீ மிகுந்த பாக்கியம் பொருந்தியிருப்பவன். திடமான ஸங்கல்ப்பத்துடன் நீ மிகவும் அரிதாகத் தவஞ் செய்தனை. ஆகையால் எனக்கு உன்னிடத்தில் பிரீதி அளவற்றிருக்கின்றது. வரம் வேண்டுவாயாக." என்றார். தன் கடுந்தவத்தின் விளைவால் ஒளிர்ந்து கொண்டிருந்த பகீரதன், நான்முகனை வணங்கி போற்றி, "ஸகரனது மக்கள் என்னால் கங்கை நீரில் நீர்க்கடன் பெறவேண்டும். அவரகளது சாம்பற்குவியல் கங்கை நீரால் நனைக்கப்படவேண்டும். இக்ஷ்வாகு வம்சம் அற்றுப் போகாமலிருக்க எனக்கு மக்கட்பேறு வேண்டும்" என்று வேண்டினான். உலகங்களுக்கெல்லாம் பாட்டனாகிய நான்முகன் "மஹாரதா! பகீரதனே! நீ விரும்பின மனோரதமானது மிகவும் பெரிதாயிருக்கின்றது. ஆயினும் அது அப்படியே நடந்தேறும்" என்று வரமளித்தான். கங்கையை பகீரதன் விரும்பியவாறு செய்யச் சொன்னார். மேலும் பகீரதனிடம் "கங்கை இமயவானின் மூத்த புதல்வி. கங்கை வானிலிருந்து பூமியில் விழுந்தால் அந்த வேகத்தை பூமியால் தாங்க இயலாது. அப்பெருக்கைத் தாங்க வல்லவன் சிவன் ஒருவனே. ஆகையால் அம்மகாதேவனை வேண்டிக் கொள்வாயாக" என்று அறிவுறித்தினார். 

பகீரதன் கால் கட்டை விரலை நிலத்தில் ஊன்றி, இரு கைகளையும் உயரத் தூக்கி, காற்றை மட்டும் உண்டு எவ்வித அசைவுமின்றி சிவனை வேண்டி தவம் செய்தான். ஓராண்டுக்குப் பிறகு சிவன் உமையுடன் பகீரதன் முன் தோன்றி மலையரசன் மகள் கங்கையை தன் சிரத்தில் தாங்க ஒப்பினான்.

கங்கையோ "யாவரும் தரிக்கதரமல்லாத என்னை சிவன் தரிக்க முயல்கிறான். நான் பெரும் பெருக்கெடுத்து பகீரதன் விருப்பப்படி பாதாளம் செல்கையில் இவனை அடித்துச் செல்வேன்" என்று தருக்கினாள். அதே போல் தன் உருவத்தைப் பெருக்கி கடும் வேகத்துடன் சிவன் தலை மீது பாய்ந்திறங்கினாள். சிவனோ அவளைத் தன் ஜடாமண்டல்த்தில் முற்றாக சிறைபிடித்து அவள் கர்வத்தை அடக்கினார். கங்கையை விடுவிக்க பகீரதன் சிவனை வேண்டி மீண்டும் கடுந்தவம் செய்யவேண்டி வந்தது. சிவன் கங்கையயை மண்ணில் விழ அனுமதித்தார். கங்கை ஏழு கிளைகளாக மண்ணில் விழுந்தாள். அவற்றுள் மூன்று ஹ்லாதினி, பாவனி, நலினி என்ற பெயர்களோடு கிழக்கு நோக்கிப் பாய்ந்தன. மூன்று ஸூசக்ஷுஸ்ஸு, சீதை, சிந்து என்ற பெயர்களோடு மேற்கு நோக்கிச் சென்றன. பகீரதன் தவத்தினால் ஒளிர்விடும் உடலுடன் ரதத்தில் ஏறி முன் செல்ல, ஏழாவது கிளையாக கங்கை பகீரதனைப் பின்தொடர்ந்துச் சென்றாள். 

சிவன் தலையில் இருந்து பேரொலியுடன் கங்கை பூமியில் விழுந்து பூமி எங்கும் பரவினாள். அப்பெருக்கில் மீன்கள், ஆமைகள், முதலைகள், மற்ற நீர் மிருகங்களும் பூமியில் விழுந்து பூமி அழகுற்றது. கங்கை பூமியில் விழுவது அற்புதமாயும் ஒப்பற்றும் விளங்கியது. அதைக் காண தேவர்களும், முனிவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும் நகரும் நகரங்கள் போன்றிருந்த விமானங்கள் மீதும், குதிரைகள், யானைகள் மீதும் ஏறி கங்கை கொட்டும் இடத்திற்கு வந்தனர். அவர்களது உடல் ஒளியும், அவர்களது ஆபரணங்களின் ஒளியும் கூடி பல சூரியர்கள் முகில்கள் இல்லாத வானில் தோன்றியது போல அவ்விடம் பேரொளி கொண்டது. பாம்புகளும், மீன்களும், முதலைகளும் மின்னற்கொடிகள் போல துள்ளித்திரிந்து நீரில் மறைந்துகொண்டிருந்தன. நீர்ப்பெருக்கின் வேகத்தால் தெறித்துச்சென்று விழுந்த வெண்நுரைகள் கூதிர்கால வானின் வெண்மேகங்கள் போலிருந்தன. 

கங்கை சில இடங்களில் வெகு வேகமாகவும், மேடுகளைச் சுற்றி வளைந்தும், சமமான இடங்களில் நேராகவும், பள்ளங்களில் விழுந்தும், மேடுகளில் மெதுகவாவும், கற்கள் மீது மேலெழும்பியும், நீரின் மீது நீர் மோதிக்கொள்வதால் உயர எழும்பி கீழே விழுந்தும் சென்றது. தேவர்களும், முனிவர்களும், பூமியில் வாழும் மனிதர்களும் புனிதமான கங்கை நீரில் நீராடினர். சாபங்களினால் வானிலிருந்து பூமியில் விழுந்தவர்கள் தூய்மையான, ஒளிபெற்ற, புனிதமான கங்கை நீரில் நீராடி சாபங்கள் நீங்கப்பெற்று வானுலகம் மீண்டனர். தேவர்களும், முனிவர்களும், தானவர்களும், கின்னரர்களும், கந்தர்வர்களும், ராக்ஷசர்களும், அப்சரசுகளும், யக்ஷர்களும், உரகர்களும் பகீரதனைப் பின் தொடர்ந்து செல்லும் கங்கையின் பெருக்கைப் பார்த்தவறே பின் சென்றனர்.

கங்கை இவ்வாறு போய்க்கொண்டிருந்தபோது வழியில் ஜாஹ்ன்வி என்ற மாமுனிவரின் யாக பூமியை மூழ்கடித்து விட்டது. முனிவர்  கங்கையை முழுதாக அருந்தி விட்டார். பகீரதனும், தேவர்களும், முனிவர்களும் மாமுனிவர் ஜாஹ்ன்வியை கங்கையை அவரது மகளாக ஏற்கச் செய்தனர். முனிவர் தன் காதுகள் வழியாக கங்கையை வெளியே விட்டார். கங்கைக்கு ஜாஹ்னவி என்ற பெயர் உண்டாயிற்று.  

இறுதியில் கங்கை கடலில் விழுந்து பாதாள உலகத்தை அடைந்தது. அங்கு ஸகர புத்திரர்களின் சாம்பலை நனைத்தது. அவர்கள் பாவங்கள் நீங்கி சொர்க்கம் சென்றனர். பகீரதனும் கங்கை நீரில் அவர்களுக்கு நீர்க்கடன் செய்தான். கங்கை பகீரதனுக்கும் மகளாகி பாகீரதி என இன்னொரு பெயர் பெற்றாள். பகீரதன் பின்னர் தன் நாட்டுக்குத் திரும்பி பல்லாண்டுகள் நல்லாட்சி செய்தான்.

கங்கை தோன்றிய இந்த கதையை மன்ம் ஒன்றிக் கேட்பவன் பொருளும், புகழும், ஆயுளும், மக்கட்பேறும், சொர்க்கமும் பெறுவான். அவனை பித்ருக்களும் மற்ற தேவதைகளும் விரும்புவர். அவனது அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும். அவனது அனைத்துப் பாவங்களும் தொலைந்து ஆயுளும் பெருமையும் பெருகும்.

துணை:

Elements of hindu iconograpy by T A Gopinatha Rao; Vol Two, part I; pages 313 - 321

ஸ்ரீ அ. வீ, நரசிம்ஹாசாரியார்; ஸ்ரீ ராமாயணம், பாலகாண்டம், தமிழ் வசனம்; 1923



Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

திருமாலின் 24 வடிவங்கள்

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்