வாரணம் அழைக்க வந்த காரணன்
கஜேந்திரன் என்னும் வாரணம் (யானை) திருமாலை சரணாகதி அடைந்து அழைத்த உடனே விரைந்து வந்து காத்த திருமாலை வேதாந்த தேசிகர் 'வாரணம் அழைக்க வந்த காரணன்' என்று மும்மணிக் கோவை என்ற தன் நூலில் அழைக்கிறார். யானைக்கு (கரி) அருளிய பெருமாள் 'கரிவரதர், கரிவரதராஜப் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். கருடன் மேல் அமர்ந்த திருமாலின் வடிவம் 'கருட நாராயணர்' என்று அழைக்கப்படுகிறது
![]() |
| கஜேந்திர மோக்ஷம் திருகண்ணமங்கை |
கஜேந்திரன் என்ற யானை திரிகூட மலையில் வருணனுடைய நந்தவனத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தது. ஒரு வேனிற் காலத்தில் தாகம் மிகுந்தபோது கஜேந்திரன் தன் பிடிகளும், குட்டிகளும் சூழ ,மதம் பெருகி வழிய, அதை வண்டுகள் பருக, அங்கிருந்த தாமரைத் தடாகத்திற்கு சென்றது. அதிலிருந்த தெளிவான, தாமரை மணம் கொண்ட நீரை தாகம் தீரப் பருகியது. பின் தன் மீதும், பிடிகள் மீதும், யானைக் குட்டிகள் மீதும் நீரை இறைத்து மகிழ்ந்தது. அப்போது அங்கு வந்த ஒரு முதலை அதன் காலைக் கவ்வி நீரினுள் இழுத்தது. கஜேந்திரன் தன் காலை மீட்கப் போராடியது. அதன் பிடிகளும் அங்கு வந்த மற்ற யானைகளும் கஜேந்திரனைக் காப்பாற்ற முயற்சி செய்தன. ஆனால் அவை அம்முயற்சியில் தோல்வியடைந்து விலகிச் சென்றுவிட்டன.
கஜேந்திரனுக்கும் முதலைக்கும் இடையிலான போராட்டம் ஆயிரம் ஆண்டுகள் நீடித்தது. கஜேந்திரனின் உடலும் மனமும் படிப்படியாகத் தளர்ந்தன. முதலையின் பலமோ கூடியது. கஜேந்திரன் தன் அகங்காரத்தை முற்றிலும் இழந்தது. ஒரு தாமரை மலரைப் பறித்து நீட்டி, மனம் குவித்து, திருமாலைச் சரணாகதி அடைந்து, ''ஆதி மூலமே, அநாத ரட்சகா" என்று அழைத்தது. "எவனால் இவ்வுலகம் உயிருள்ளதாகிறதோ அந்த ஆதிசக்தியான இறைவனை வணங்குகிறேன். இவ்வுலகு எவனிடமிருந்து உண்டாகிறதோ, எவன் வடிவாகவே உள்ளதோ, எவன் அதன் காரிய காரணத்திற்கு அப்பாற்பட்டவனோ அவனைச் சரண் அடைகிறேன்." என்று தொடங்கி திருமாலைத் துதித்தார்.
![]() |
| திருமாலைச் சரண் அடைந்து அழைக்கும் கஜேந்திரன் நவநீத கோபாலகிருஷ்ணர் கோயில், மேக்களூர் கீழ் பெண்ணாத்தூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
![]() |
| கஜேந்திர மோக்ஷம்; தசாவதாரக் கோயில் தேவ்கர், லலித்பூர் மாவட்டம், உ.பி குப்தர் கலை; பொ.ஆ. 500 (Bob King, CC BY 2.0 <https://creativecommons.org/licenses/by/2.0>, via Wikimedia Commons) |
கஜேந்திரனின் அழைப்பு கேட்ட திருமால் அக்கணமே வேத வடிவினான கருடன் மீதேறி அவ்விடம் வந்தார். தன் ஆழியால் முதலையின் வாயைப் பிளந்து கஜேந்திரனை விடுவித்தார். கஜேந்திரன் வழங்கிய தாமரையை ஏற்றுக் கொண்டார். முக்தி அளித்தார். தேவர்களும், கந்தர்வர்களும், முனிவர்களும் சிவன், நான்முகன் முன்னிலையில் மாலின் செயலைக் கொண்டாடி பூமாரி பொழிந்தனர்.
![]() |
| கஜேந்திர மோட்சம் நவநீத கோபாலகிருஷ்ணர் கோயில், மேக்களூர் கீழ் பெண்ணாத்தூர் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் |
முற்பிறவியில் ஆற்றில் நீராடுகையில் விளையாட்டாக தேவல முனிவரின் காலைப் பிடித்து இழுத்த ஹூஹூ என்ற கந்தர்வன் முனிவரது தீசொல்லால் முதலையாகப் பிறந்தான். திருமாலின் ஆழியால் வெட்டுண்டு தீச்சொல் நீங்கி தன் உருவம் பெற்றான்.
கஜேந்திரன் முற்பிறவியில் இந்திரதுய்மன் என்னும் மன்னனாக இருந்தான். திருமாலிடம் பெரும் பக்தி கொண்டு மலயபர்வதம் என்னும் இடத்தில் திருமாலை எண்ணி மௌன விரதம் பூண்டு திருமாலை வழிபட்டுக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த அகஸ்திய முனிவரை முறையாக வரவேற்காததால், அவர் அவனை யானையாக பிறக்குமாறு தீச்சொல் இட்டார். தன் முற்பிறவித் தொடர்பால் இறைஞானம் தோன்றி இறைவனைச் சரணடைந்தார்.
இந்தக் கதையைக் கேட்பவர்களுக்கு சுவர்க்கமும், புகழும் கிடைக்கும், கலி தோஷம் நீங்கும் என்றார் சுக மாமுனிவர்.
இந்த கதையில் சரணாகதி தத்துவமும், சரனாகதி அடைந்த பக்தனின் அழைப்புக்குத் திருமால் விரைந்து வந்த வேகமும் சுட்டப்படுகின்றன.
கருட நாராயணன்
கஜேந்திர மோக்ஷக் கதைத் தொடர்பின்றி கருடன் மீது அமர்ந்து பயணிக்கும் திருமால் உருவம் கருட நாராயணன் எனப்படும்.
![]() |
| துர்க்கை கோயில், ஐஹோளே |
நன்றிக்கடன்
https://bharatbhaktas.wordpress.com/2020/07/04/ஸ்ரீமத்பாகவதம்-ஸ்கந்தம்-
https://rvenkatesan2307.com/2021/12/12/கஜேந்திர-மோக்ஷமும்-ஆழ்வா





Comments
Post a Comment