அதிகார நந்தி

சிவன் கோயில்களில்  மூன்று நந்திகள் உள்ளனர்.
  1. விடை (ரிஷப) வாகனம்
  2. வாயிற்காவலர் நந்தி
  3. அதிகார நந்தி

அதிகார நந்தி
  • சிவகணங்களின் தலைவன்.
  • நந்தி குரு பரம்பரையின் முதல்வன்

அதிகார நந்தி
ஐராவதேசுவரர் கோயில், தாராசுரம்
(படம் நன்றி: விஜய் ஷங்கர் பட்)
  • அதிகார நந்தி சிவனைப் போன்று ஜடாமகுடம், அதில் நிலா, காதுகளில் மகர பத்ர குண்டலங்கள், நெற்றிக் கண், பின் கைகளில் மழு, மான் போன்ற அடையாளங்கள் பெற்று விளங்குகிறார். 
  • கட்கத்தை (வாள்) அணைத்தவாறு அஞ்சலி முத்திரையுடன் திரிபங்க நிலையில் நின்றுள்ளார். (வாளுக்கு பதிலாக பிரம்பும் இருப்பது உண்டு) வாளும் பிரம்பும் அவர் அதிகாரத்தின் சின்னங்கள்.
  • அஞ்சலி முத்திரையே இவரை அதிகார நந்தி என்று அடையாளப்படுத்துகிறது
அதிகார நந்தி எருது முகம் பெற்றும் விளங்குவது உண்டு.

அதிகார நந்தி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ருத்திராட்ச மண்டபம்

நந்தியின் தோற்றம்

நந்தியின் தோற்றம் குறித்து மூன்று கதைகள் உள்ளன.

1. சிவமகா புராணக் கதை
சாலங்காயனர் என்னும் முனிவர் சாலக்கிராமம் என்னும் இடத்தில் சால மரத்தின் கீழ் பிள்ளைப்பேறு வேண்டி தவம் இருந்தார். அவர் முன் தோன்றிய திருமாலிடம் பேரறத்தான் ஆகிய மகன் ஒருவனை வேண்டினார். அந்தக் கணமே திருமாலின் வலது பக்கம் சிவனைப் போன்ற உருவம் கொண்டிருந்த மகன் தோன்றினார். அவருக்கு நந்திகேஸ்வரர் என்று பெயரிட்டனர். இது நந்தியின் 49 வது பிறப்பு.

2.இரண்டாம் கதை
திரேதா யுகத்தில் நந்தி என்னும் முனிவர் மந்தார மலையில் முஞ்சவனம் என்னும் சிகரத்தில் கடும் தவம் இருந்தார். அவர் தவத்தால் மகிழ்ந்த சிவன் அவர் முன் தோன்றினார். முனிவர் தான் சிவனிடம் அசைவற்ற பக்தியும் அன்பும் கொண்டிருக்கவேண்டும் என்றும், தான் சிவகணங்களின் தலைவனாக வேண்டுமென்றும் கோரினார். சிவன் அவ்வரங்களை அவருக்கு வழங்கினார்.

3. லிங்க புராண கதை
சிலாதர் (கல்களை உண்பவர்; சிலா = கல்) பார்வையற்ற முனிவர். அவர் மனைவி சித்திரவதி.  மனிதருக்குப் பிறவாத மரணமில்லா மகனை வேண்டித் தவம் இருந்தார். இந்திரன் சிவன் மட்டுமே அத்தகைய வரம் அளிக்க முடியும் என்றும் கூறி அவரை சிவனை நோக்கித் தவம் செய்யச் சொன்னான். அவரும் அவ்வாறே செய்ய சிவன் தானே அவருக்கு மகனாவதாக வரம் வழங்கினார். அவ்விடத்தில் சிவனைப் போன்ற உருவமும், அணிகளும், ஆயுதங்களும் கொண்ட மகன் தோன்றினான். சிவன் அவனுக்கு நந்தி எனப் பெயரிட்டார். முனிவர் தன் ஆசிரமத்திற்கு திரும்பியபோது நந்தியின் இறைத் தோற்றம் மறைந்து சாதாரண மனிதத் தோற்றமுடையவன் ஆனான். சிலாதர் அவனுக்கு வேதங்களையும், மற்ற கலைகளையும் கற்பித்தார். ஒரு நாள் சிலாதரின் ஆசிரமத்திற்கு வந்த மித்ரர், வருணர் என்னும் இரு முனிவர்கள் நந்தி ஒராண்டில் இறப்பான் என்று தங்கள் ஞானப்பார்வையால் கண்டு உரைத்தனர். சிவன் மட்டுமே அதைத் தடுக்க முடியும் என்றும் கூறினர், மனம் தளரா நந்தி சிவனை நோக்கிக் கடுந்தவம் இருந்தான். ஒரு கோடி ருத்ர ஜபம் செய்தான். அவ்வாறு மும்முறை செய்தபின், மனம் மகிழ்ந்த சிவன் கணங்கள் சூழ அவன் முன் தோன்றினார். அவனை அணைத்து தன் கழுத்தில் இருந்த மாலை ஒன்றை அவன் கழுத்தில் இட்டார். உடனே நந்தி மீண்டும் சிவனை ஒத்த உருவம் பெற்றார். சிவன் நந்திக்கு மரணமில்லா வாழ்வு வழங்கி, அவரைத் தன் கணங்களுக்குத் தலைவன் ஆக்கினார். மருதர் மகள் சுயஷா வை அவருக்கு மணமுடித்து வைத்தார்.

அதிகார நந்தி மனைவி சுயஷா உடன்
வழுவூர்
(படம் நன்றி: Elements of Hindu Iconography by T.A. Gopinatha Rao Vol II plate CXXXI 1st Ed;1914) 

சுயஷா சுயஷாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்

கந்த புராணத்தில் உள்ள நந்தியின் முன் பிறவிக் கதை

சிவ கணங்களின் தலைவனாக வீரகன் என்பவர் இருந்தார். ஒருமுறை பார்வதி சிவனோடு ஊடல் கொண்டு கைலாயத்தில் இருந்து வெளியேறினார். அப்போது சிவனால் கொல்லப்பட்ட அந்தகாசுரனது மகன் ஆதி என்ற அசுரன் சிவனைக் கொல்ல எண்ணி பார்வதி போல் மாறுவேடமிட்டு வீரகனை ஏமாற்றி கைலாயத்துக்குள் நுழைந்தான். அவன் சிவனைப் புணர முயன்றபோது சிவன் தனது குறியில் ருத்ராக்ஷத்தைப் பொருத்திக் கொண்டு அவனைப் புணர்ந்து அவனைக் கொன்றுவிட்டார். தானில்லாதபோது வேறொரு பெண்ணை கைலாயத்தினுள் அனுமதித்ததற்காக பார்வதி வீரகனை பூமியில் பிறக்குமாறு தீச்சொல் இட்டாள். வீரகன் அவள் அடிபணிந்துக் கதற, அவன் சிலாதரின் மகனாகப் பிறந்து தவம் புரிந்து நந்தி என்னும் பெயருடன் கைலாயம் மீள்வான் என அருள் புரிந்தாள். 

நந்தியும் ராவணனும்

ராவணன் தன் அண்ணன் குபேரனின் அளகாபுரியை வென்று குபேரனின் புஷ்பக விமானம், ஒன்பது நிதிகள் ஆகியவற்றைக் கைப்பற்றினான். அவன் இலங்கை திரும்பும்போது கைலாயம் குறுக்கிட்டது. அங்கிருந்த நந்தி அவனை கைலாயத்தை சுற்றிப் போகச் சொன்னார். சினமுற்ற ராவணன் நந்தியை குரங்கு முகத்தோன் என்று பழித்தான். அதிகார நந்தி சிவனது முகத் தோற்றத்தைப் பெற்றவர் ஆதலால் அது சிவ நிந்தனை ஆயிற்று. நந்தி ராவணன் குரங்குகளால் அழிவான் என்று தீச்சொல்லிட்டார்.

நந்தியும் கருடனும்

திருமால் கருடனின் மீதேறி சிவனைக் காண கைலாயம் சென்றார். நந்தியின் அனுமதியுடன் திருமால் உள்ளே செல்ல கருடன் வெளியே காத்திருந்தார். நெடு நேரம் ஆனதால் கருடன் திருமாலைக் கண்டு கட்டளை பெற எண்ணி கைலாயத்தினுள் நுழைய முயன்றார். நந்தி அவருக்கு அனுமதி மறுத்தார். வாக்குவாதத்தில் தன்னிலை மறந்து கருடன் சிவனை பிச்சாண்டி என்று இழித்துக் கூறி விட்டார். அதைப் பொறுத்துக்கொள்ள இயாலாத நந்தி கருடனை தன் மூச்சைப் பெரிதாக உள்ளிழுத்தும் வெளிவிட்டும் தாக்கினார். பெரும் புயலில் சிக்கியது போல உழன்று தவித்த கருடன் தன்னைக் காக்க திருமாலிடம் மனத்தால் வேண்டினார். திருமால் சிவனிடம் முறையிட சிவன் நந்தியிடம் கருடனை விட்டுவிடும்படி ஆணையிட்டுக் காத்தார். 

இவ்வாறு கருடனுக்கு அருளிய சிவனின் வடிவம் சிவனின் 64 வடிவங்களில் ஒன்றாக 'கருடாந்திக மூர்த்தி' என்று அழைக்கப்படுகிறது. இதனை நக்கீரர்  பதினோராம் சைவத் திருமுறை, கோபப் பிரசாதத்தில் 'கார்மலி உருவக் கருடனைக் காய்ந்தும்'  என்று குறிப்பிடுகிறார்.

நந்தியும் தட்சனும்

தட்ச யாகத்தின் போது தட்சன் சிவனை இழிவாகப் பேச அங்கிருந்த நந்தி அவன் அழிய தீச்சொல் இட்டார்.

நந்தி குரு பரம்பரை

சைவ சமயத்தில் நந்தி குரு பரம்பரையின் ஆதி குருவாக நந்தி உள்ளார். அவர் சிவ பார்வதியிடம் சைவ ஆகமங்களை நேரிடையாகக் கற்றறிந்தார்.  சனத் குமாரர்கள் நால்வர் (சனகர், சனதர், சனாதனர், சனாந்தனர்), வியாக்கிரபாதர், பதஞ்சலி, திருமூலர், சிவயோகமுனி ஆகிய எண்மர் நந்தியின் சீடர்கள். அவர்கள் சைவ சமயத்தை வளர்த்துப் பரப்பினர். 

மிருதங்க மேதை

நந்தி மிருதங்க வாத்தியத்தின் இறைவனாக கருதப்படுகிறான். சிவ தாண்டவத்தின் போது நந்தி மிருதங்கம் வாசிப்பார்.


கூடுதலாக

சிலாதரின் முற்பிறப்புக் கதை: https://temple.dinamalar.com/news_detail.php?id=61962

நந்தியின் திருமணம் திருமழபாடியில் நிகழ்ந்ததாக அவ்வூர் புராணம்:
"சிவன் நந்திக்கு வியாக்ரபாத முனிவரின் மகள் சுயம்பிரகாசை என்ற பெண்ணை பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமழப்பாடியில் திருமணம் செய்துவைத்தார். இதற்காக திருவையாறில் இருந்து திருமழப்பாடிக்கு நந்தி குதிரை வாகனத்திலும், ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி வெட்டிவேர் பல்லக்கிலும் செல்கின்றனர். திருமழப்பாடியில் இறைவன் வைத்திய நாதரும், இறைவி சுந்தராம்பிகையும், கண்ணாடி பல்லக்கில் வந்து மாப்பிள்ளை வீட்டாரை எதிர் கொண்டு அழைக்கின்றனர். அன்று மாலை நந்தீஸ்வரர் சுயம்பிரகாசை திருமணம் நடக்கிறது.


நன்றிக்கடன்

விஜய் ஷங்கர் பட்
T.A. Gopinatha Rao; Elements of Hindu Iconography; 1st Ed;1914; Vol II plate CXXXI


இரா. இராமகிருட்டினன்; அஷ்டாஷ்ட மூர்தங்கள்; நர்மதா பதிப்பகம்; 2016


Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

திருமாலின் 24 வடிவங்கள்

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்