திரிபுராந்தகர்

பாதாமி அருங்காட்சியக சிற்பம்

நான் கீழ்கண்ட திரிபுராந்தகரின் சிற்பத்தைப் பார்த்தது கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள அருங்காட்சியகத்தில். 29/10/2019 அன்று. நுழைவாயிலை அடுத்த முன் கூடத்தில் இருந்தது சிற்பம். அருங்காட்சியகத்தில் உள்ள முதன்மையான காட்சிப்பொருட்களில் இதுவும் ஒன்று. இந்த சிற்பம் பட்டடக்கல் விருபாக்ஷர் கோயிலில் இருந்து கிடைத்தது.. 8 ஆம் நூற்றாண்டு, சாளுக்கியர் கலை.

திரிபுராந்தகர்: பாதாமி அருங்காட்சியகம்.
Source: https://www.deccanherald.com/spectrum/spectrum-top-stories/past-preserved-735815.html
முப்புரம் 

சிற்பத்தின் மேல் இடது மூலையில் அம்பு குறிபார்த்து உள்ளது முப்புரம் (வடமொழியில் திரிபுரம்) எனும் மூன்று கோட்டை நகர்கள். ஒன்று பொன்னாலானது, தாரகாக்ஷனுக்குரியது. வெள்ளியாலான  இரண்டாவது கமலாக்ஷனுக்குரியது.  இரும்பாலான மூன்றாவது வித்யுன்மாலிக்குரியது. இம்மூவரும் முருகனால் கொல்லப்பட்ட தாரகாசுருனுடைய மகன்கள். நான்முகனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து பெற்ற வரங்களால் மயனை அழைத்து இந்த முப்புரங்களை அமைத்துக்கொண்டனர். வெல்லற்கரிய அந்த முப்புரங்கள் தனித்தனியாக பறந்து திரிபவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு கணம் அவை ஒன்றை ஒன்று சந்திக்கும்போது ஒற்றைக் கணையால்தான் முப்புரங்களையும் அவற்றை ஆளும் அசுரர் மூவரையும் அழிக்க இயலும். அவ்வாறு அவை முப்புரங்கள் ஒன்று சேர்ந்த கணம் இது.

தேர், படைக்கலன்கள் 

சிற்பத்தில் தேவர்கள் சிவனுக்கு உருவாக்கி அளித்த வல்லமை வாய்ந்த தேர், படைக்கலங்கள் காட்டப்பட்டுள்ளன.
  • தேர்;                  பூமி
  • தேரோட்டி:     நான்முகன்
  • சக்கரங்கள்:  சூரியனும், சந்திரனும்
  • குதிரைகள்:    நான்கு வேதங்கள்
  • வில்:                   மேரு மலை
  • நாண்:               வாசுகி பாம்பு
  • அம்பு:                விஷ்ணு; நுனியில் அக்கினி; பின்பகுதி எமன்.
சிவன் 

சிற்பத்தின் நடுநாயகமாக சிவன். அம்பை வில்லில் பொருத்தி நாணை இழுத்து முப்புரங்களை குறிவைத்துப் புன்னகைக்கும் சிவன். அந்த கணத்தின் சிறப்பு மிக்க இயங்கு நிலைச் சிற்பம் இது. 

ஜடா மகுடம். அதில் பிறைச் சந்திரன். நெற்றிக்கண். அழகிய திருமுகம். அதில் புன்னகை. எட்டு கரங்கள். வலது கரங்களில் மேலிருந்து கீழாக வாள், வில், காக்கும் கரம், வேல். இடது கரங்களில் மேலிருந்து கீழாககேடயம், வில், நாகம். அம்பு செலுத்துவதற்கு ஏற்ப வளைந்த உடல். 

பின்னணி 

அசுரர்கள் மூவரும் முப்புரம் கொண்டு மூவுலகையும் வென்றனர். இந்திரன் நகர் அமராவதி வீழ்ந்தது. இந்திரனும் தேவர்களும் அவர்களுக்கு அடி பணிய நேரிட்டது. மூவரும் சிறந்த சிவ பக்தர்களாகவும் திகழ்ந்தனர். இந்திரனும் தேவர்களும் அவர்களை வெல்லும் வழியறியாது திருமாலிடம் வழி காட்டுமாறு இறைஞ்சினர். திருமால் 'சிவனால் மட்டுமே அவர்களை அழிக்க இயலும். முதலில் அவர்களை சிவ பக்தியிலிருந்து விலக்க வேண்டும். பின்னர் சிவனை வேண்டி உரிய நேரத்தில் அவர்களை அழிக்க வேண்டும்.' என்றார். 

திருமாலே தன மாயா சக்தியினால் புத்தராகத் தோன்றி மூவரது மனதையும் சிவநெறியிலிருந்து பிறழச் செய்தார். இந்திரனும் தேவர்களும் சிவனைத் துதித்து முப்புரங்களையும், அசுரர்கள் மூவரையும் அழித்து தங்களை காத்தருள வேண்டினர். சிவன் மனங்கனிந்தார். 

உரிய காலத்தில் சிவன் அத்தேரிலேறி தேவர் படை சூழ போருக்கு எழுந்தருளினார். முப்புரங்களும் அருகில் வரும் நேரத்தில் அம்பை வில்லில் பொருத்தி நாணை இழுத்து முப்புரங்களை குறிவைத்துப் புன்னகைத்தார். அந்த கணத்தின் சிறப்பு மிக்க இயங்கு நிலைச் சிற்பம் இது.

பின்னர் 

முப்புரங்கள் எரிந்தன.  தேர்ப்பாகனான நான்முகன் தன பின் தலைக்கு கண்களால் சிவனைப் பார்த்திருந்தார். அவர் சிவன் கையிலிருந்து அம்பு எழவில்லையென்றும் தன புன்னகையினாலேயே சிவன் முப்புரங்களை எரித்தார் என்றும் அறிந்தார். தங்கள் பங்களிப்பு குறித்து பெருமிதம் கொண்டிருந்த தேவர்கள் செருக்கழிந்தனர். அவர்கள் பங்களிப்பு பயன்படவேண்டும் என்று எண்ணிய நான்முகன் சிவனை வேண்ட, அவர் அம்பையும் முப்புரங்கள் மீது செலுத்தினார். 

முப்புரங்கள் அழிந்தன. அசுரர் மூவரும் மாயையில் இருந்து விடுபட்டு சிவன் பாதம் பணிந்தனர். சிவன் தாரகாக்ஷனையும் கமலாக்ஷனையும் தம் வாயிற்காவலர் ஆக்கினார். வித்யுன்மாலி குடமுழவு முழக்குபவன் ஆனான். 

புறநானூறு

திரிபுராந்தகரைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியமான புறநானூற்றிலேயே வருகிறது.

ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல

பொருள்:
உயர்ந்த மலையைப் பெரிய வில்லாகவும் பாம்பை நாணாகவும் கொண்டு,
ஒரே அம்பில் முப்புரங்களையும் அழித்து,
பெரிய வலிமையுடைய தேவர்களுக்கு வெற்றியைக் கொடுத்த, 
கரிய நிறமுடைய கழுத்தையுடைய சிவபெருமானின் அழகிய திருமுடியின் பக்கத்தில் உள்ள 
பிறைநிலவைப் போன்ற நெற்றியில் உள்ள கண்போல்

புறநானூறு - 55; பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். துறை: செவியறிவுறூஉ

தத்துவம் 

முப்புரம் எரித்த நிகழ்வு சிவன் தன் புன்னகையால் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை எரித்ததையே குறிப்பிடுகிறது என்பர். “அப்பு அணி செஞ்சடை ஆதிபுராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புரமாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யார் அறிவாரோ” - திருமந்திரம். 

அட்டவீரட்டங்கள் 

அட்ட வீரட்டம் என்பது சிவபெருமானின் வீரத்திருவிளையாடல்கள் எட்டைக் குறிக்கும். சிவன் இவ்வாறு தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆணவத்தை அடக்கி ஆட்கொண்ட நிகழ்வுகளோடு தொடர்புடைய எட்டு தமிழ்நாட்டுத் தலங்கள் அட்டவீரட்டத் தலங்கள் எனப்படுகின்றன.
  1. நான்முகன் சிரம் கொய்தது (பிரம்மரச்சதனன்)- திருக்கண்டியூர்
  2. அந்தகாரசுரனைச் சங்கரித்தது (அந்தகாரி) - திருக்கோயிலூர்
  3. திரிபுரம் எரித்தது (திரிபுராந்தகன்)திருவதிகை
  4. தக்கன் சிரம் கொய்தது (தக்கச்சாரி) - திருப்பறியலூர் (பரசலூர்) 
  5. சலந்தரனைத் தடித்தது (ஜலந்தராரி) - திருவிற்குடி
  6. யானையை உரித்தது (கஜாந்தகன்)- வழுவூர்
  7. காமனை எரித்தது (காமாந்தகன்) - திருக்குறுக்கை
  8. காலனை உதைத்தது (காலசங்காரன்) - திருக்கடையூர்
"ஆமன் சிரங்கண்டி, அந்தகன் கோவல், புரம்அதிகை
மாமன் றியல், சலந்தான் விற்குடி, மாவழுவூர், 
காமன் குறுக்கை, யமன்கடவூர், இந்தக் காசினியில் 
தேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன் சேவகமே "


மேலும் அறிய 

ஆய்வு: திருஞானசம்பந்தர் பாடல்களில் சிவனின் அட்டவீரட்டத் தொன்மங்கள் – I



















Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

திருமாலின் 24 வடிவங்கள்

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்