விசிறிக்கல்

விசிறிக்கல், பறவைக்கல் என்னும் பெயர்களில் அழைக்கப்படும் சிற்பம் கல்லில் வடிக்கப்பட்ட, தொன்மையான, பெரிய அளவிலான, குறியீட்டுச் சிற்பமாகும். இந்தச் சிற்பம் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகவும் ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாகவும், தாய்த்தெய்வ வழிப்பாட்டின் முன்னோடியாகவும்  கருதப்படுகிறது.

இடங்கள்

தமிழகத்தில் இரண்டு இடங்களில் விசிறிக்கல் கிடைத்துள்ளது.
  1. தா மோட்டூர் - திருவண்ணாமலை மாவட்டம்
  2. உடையாநத்தம் - விழுப்புரம் மாவட்டம்
தா மோட்டூர்

அமைவிடம்

திருவண்ணாமலை - அரூர் - சேலம் சாலையில் திருவண்ணாமலையில் இருந்து 33 கிமீ தூரத்தில் உள்ள ஊர் தானிப்பாடி. தானிப்பாடியில் இருந்து சுமார் சுமார் 3 கிமீ தூரத்தில் உள்ளது தா வேளூர். அவ்வூருக்குச் செல்லும் சாலை தானிப்பாடி பேருந்து நிறுத்தத்தின் முன் பிரிகிறது. தா. வேளூர் பக்கத்தில் இருக்கும் ஒரு  கிராமம் தா மோட்டூர் (தானிப்பாடி மோட்டூர்). தென்பெண்ணையாற்றின் தெற்கே அமைந்துள்ளது. ஊரில் இருந்து ஒரு கரடுமுரடான பாதை வழியாக விசிறிக்கல் இருக்கும் இடத்தை அடையலாம். கடைசியில் வயல்கள் ஊடாக ஒரு பொடிநடை. 

அப்பகுதி மக்கள் இவ்விடத்தைக் 'கூத்தாண்டவர் கோயில்' என அழைக்கின்றனர். அப்பெயரையே உபயோகித்து வழி கேட்பது நல்லது.

கூகிள் வரைபடத்தில் அமைவிடம்: 12.138265, 78.834471 (12°08'17.8"N 78°50'04.1"E)

சிற்பம் 

வயல்கள் வழியாகச் செல்லும்போது தூரத்தில் இருந்தே அதன் பின்புறத் தோற்றம் தெரிகிறது. 

வழியில் இருந்து பின்புறத் தோற்றம்

இந்திய தொல்லியல் துறை ஒரு பலகையை வைத்துள்ளது. அது தவிர எந்த பராமரிப்புப் பணியையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

பக்கத் தோற்றம், இந்திய தொல்லியல் கழக பலகை.

முன்புறத் தோற்றம்

கல்வட்டங்களில் ஒன்றின் நடுவில் விசிறிக்கல் அமைந்திருந்ததாகத் தெரிகிறது. இப்போது மரத்தடியில் ஒரு மேட்டின் முன் உள்ளது. கற்பலகை 125" (3.18 மீட்டர்) அகலமும், 105" (2.67 மீ) உயரமும் உடையது. (நான் அளந்தது). ஆனால், பருமன் 10 செமீ தான். 

விசிறிக்கல்

இந்த புராதன  சிலை விசிறி வடிவில் இருப்பதால் இது  'விசிறிக்கல்' என்று அழைக்கப்படுகிறது, 

பறவைக்கல் 

மனிதர்கள் இறந்த பின், உயிர் பறவையாகப் பறந்து மேலுலகம் செல்லும் என்பது முற்கால நம்பிக்கை. எனவே இந்த சிற்பங்கள் பறவை வடிவில் வடிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. குறிப்பாக பின்புறம் இருந்து பார்க்கையில் சிலையின் கீழ்ப்பகுதி மேட்டால் மறைக்கப்பட்டு, அது ஒரு சிறகு விரித்தப் பறவையைப் போலவே உள்ளது. எனவே, 'பறவைக் கல்' என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். 

கூத்தாண்டவர்

இது மனித உருவத்தைப் போன்றும் (anthropomorphic) காணப்படுகிறது. ஆண் பெண் பாலின வேறுபாடு அல்லது தெளிவான அங்க அமைப்புகள் இல்லை. தலை இல்லாமலும், தோள்பகுதி அகன்றும், அமர்ந்த நிலையில் இரண்டு கால்களை விரித்து வைத்துள்ளது போலும் அமைந்துள்ளது. 

இது தலை இல்லாத முண்டம் போல் உள்ளதால் மக்கள் இதை 'கூத்தாண்டவர்' என்று வழிபடுகின்றனர். 

கூத்தாண்டவர் மகாபாரதத்தில் வரும் அரவான் (அரவு - பாம்பு) என்னும் கதாபாத்திரம் ஆவார். இவர் பாண்டவர்களின் வனவாசத்தின்போது உலூபி என்னும் நாக கன்னி அர்ச்சுனனுடன் வாழ்ந்து பெற்ற மகன் ஆவார். போர் தொடங்குமுன் வெற்றிக்காக வேண்டி நல்ல நேரத்தில் எந்த குற்றமும் இல்லாத அனைத்து நல் உடல் அமைப்புகளும் உடைய வீரன் ஒருவனை பலியிடுவது அக்கால மரபு. அவ்வாறு மகாபாரதப் போருக்கு முன்பு பாண்டவர்கள் தரப்பில் பலி கொடுக்கத் தேர்வானவன் அரவான். அவனுக்கு மணம் ஆகவில்லை என்னும் குறையை நீக்க கண்ணன் மோகினியாக மாறி அரவானை மணந்தார். ஒருநாள் அவன் மனைவியாக வாழ்ந்தார். அவன் பலியானதன் பின் தாலி அறுத்தார். அரவானது வெட்டப்பட்டத் தலை கம்பத்தின் மேல் உயர்த்தி வைக்கப்பட்டு போரைக் கண்டுகொண்டிருந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகம் என்ற ஊரில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை முழுநிலா நாளன்று அரவாணிகள் கூடி தங்களை மோகினியாகக் கருதி அரவானை மணந்து மறுநாள் தாலி அறுக்கின்றனர்.

தாய் தெய்வம்

இங்குள்ள மக்கள் இந்த சிலையை கூத்தாண்டவர் என்ற ஆண் தெய்வமாக வழிபடும்போது, ஆய்வாளர்கள் இது தாய் தெய்வமாக வழிபடப்பட்டது என்று கூறுகின்றனர். இந்த சிற்பத்தின் வடிவம் திருமகளின் குறியீட்டு வடிவமான திருமறு (ஸ்ரீவத்சம்) உடன் ஒத்துப் போவதாகவும் கருதப்படுகிறது.

கொற்றவை வழிபாடு இந்த தாய் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சி. மோடு, மோட்டாள், மோடி என்பது தாய் தெய்வங்களின் வயிற்றைக் குறித்த பெயர்களாகும். 

ஆய்வாளர்களின் மற்ற கருத்துகள்

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்விலும் செம்பினாலான மனித உருவொத்த சிலை கண்டெடுக்கப்பட்டன. மேலும், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் லிங்கானா, வாரங்கல் மாவட்டம் தோட்டகுட்டா, சித்தூர் அருகேயுள்ள மிடிமில்லா, கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டம் குமாதி ஆகிய இடங்களில், மனித உருவத்தை போன்ற சிலைகள் காணப்படுகின்றன.  மேலும், ஜெர்மன், பிரான்ஸ் நாட்டிலும் இதுபோன்ற சிலைகள் காணப்படுகின்றன. இது போன்ற இடங்களில் கிடைத்த சிலைகளில், மனித உருவம், உடல் உறுப்பு பாகங்கள் இல்லாதது, நீண்ட தோள் பகுதி, தலைப்பகுதி முழுமையாக இல்லாதது ஆண், பெண் வேறுபாடு காண முடியாதது. வணங்கக்தக்க அமைப்பை பெற்றிருத்தல் போன்ற சில பொதுவான அமைப்புகள் காணப்படுகிறது. ஆந்திரத்தில் கிடைத்த சிலுவைச் சிற்பங்களில் மார்பகங்கள் காட்டப்பட்டுள்ளன.

கல் வட்டங்கள்

இவ்வூரின் மேற்கில் வேளூர் மலை உள்ளது. 

வேளூர் மலை

அதன் அடிவாரத்தில் 60 க்கும் மேற்பட்ட கல் வட்டங்கள் உள்ளன. இக்கல்வட்டங்கள் 3. 5 மீ முதல் 12 மீ வரையான விட்டங்களைக் உடையவை. மலையின் கிழக்குப் பகுதி முழுவதும் சுமார் ஏழு ஹெக்டேர் பரப்பில் இவை காணப்படுகின்றன. பெரும்பாலானவை காலப்போக்கில் அழிந்துவிட்டன.

பெருங்கற்கால மக்கள் இறந்தவர்களை தாழியில் அடைத்து புதைக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். புதைத்த இடத்தை அடையாளம் காண கல் வட்டங்கள் அமைக்கும் வழக்கம் இருந்தது. இத்தகைய கல் வட்டங்கள் தென்னிந்தியா முழுவதும் சில வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன. கல்வட்டங்களில் வழிபடுவதற்கான அமைப்புடைய விசிறிக்கல் சிலையை நிறுவியுள்ளனர். 

அகழாய்வு

கல்வட்டங்களையும், விசிறிக்கல்லையும் முனைவர் பி. நரசிம்மையா கள ஆய்வின்போது கண்டறிந்தார். இந்திய தொல்லியல் துறையினர் எல். கே. சீனிவாசன் தலைமையில் 1978-79 ஆம் ஆண்டுகளில் மோட்டூரில் அகழ்வாய்வுகள் மேற்கொண்டனர். இதில் சிதைந்த கல் பதுக்கைகள், பெருங்கற்காலப் பண்பாட்டினைச் சேர்ந்த மட்கலங்கள், ஈமப்பேழைகள், செமிலான் கிண்ணம், மானின் உருவம், வளையல்கள், இரும்பு கத்திகள், உளி குறுவாள், அரிய கல்மணிகள், மனித எலும்புகள் ஆகியன கிடைத்தன. செங்கம், தண்டராம்பட்டு பகுதியில் தொன்மையான நடுகற்கள், பாறைகீறல்கள் உள்ளது குறிப்பிடத் தக்கது.


உடையானத்தம்

அமைவிடம்

உடையாநத்தம் விழுப்புரம் மாவட்டம், கனல் வட்டத்தில்  விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள சிற்றூர். விழுப்புரத்திலிருந்து 26 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும், உள்ளது.  இவ்வூரிலிருந்து பாறை ஓவியம் உள்ள கீழ்வாலை 3 கி.மீ. தூரம். இவ்வூரின் பின் குறியீடு 605701
கூகிள் வரைபடத்தில் அமைவிடம்: 12.060188794564773, 79.33596201196161 
(12°3'36"N   79°20'9"E)

விசிறிக்கல்

விசிறிக்கல் உடையானத்தம் ஆதிலியம்மன் கோவிலுக்கும்  ஈமக்காட்டில் கல்வட்டங்கள் அமைந்துள்ள இடத்திற்கும் அருகில்  விசிறிக்கல் உள்ளது. விசிறிக்கல்லின் ஒரு பகுதி மண்ணுள் புதையுண்டுள்ளது. மண்ணுக்கு வெளியே உள்ள பகுதி ஏறக்குறைய 12 அடி உயரம். 

உடையாநத்தம் விசிறிக்கல்
(படம் நன்றி; விக்கிமேபியா)


துணை

து துளசிராமன்; திருவண்ணாமலை மாவட்டத்தில் தொல்லியல் அகழாய்வுகள்; திருவண்ணாமலை மாவட்டத் தடயங்கள்;மணிவாசகர் பதிப்பகம்; முதல் பதிப்பு;2016





சசிகலா, கோ; தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும்; தடாகம்; முதல் பதிப்பு; 2021 ப-83

கூத்தாண்டவர் திருவிழா பதிவு: https://youtu.be/79yTKeecJWw




Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

திருமாலின் 24 வடிவங்கள்

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்