காளி

பெங்களூரு அருங்காட்சியகத்தில் என்னை மிகவும் கவர்ந்த சிற்பம் இது. சுகாசனக் காளி.

பெங்களூரு அருங்காட்சியகம்: சுகாசனக் காளி 

சிற்ப வர்ணனை 

மண்டையோட்டு கிரீடம். அதன் வாயிலிருந்து படமெடுக்கும் இரு நாகங்கள். இருபுறமும் அனல் கக்கும் அலைகளாய் ஜுவாலா மகுடம். நெற்றிக்கண். மூன்று கண்களும் அகலத் திறந்து வெறித்த நோக்கு. எதிர்மறையாய் வாய் சற்றே திறந்து அழகிய சிறு பற்கள் காட்டும் முறுவல். பேரெழில் பெண் உருவம். நான்கு கைகள். மூன்று உடுக்கை, சூலம், கபாலம் என ஆயுதங்கள் தாங்க, வலது முன்கை காக்கும் கை. வலது காதில் நர குண்டலம். இடது காதில் நாக குண்டலம். மண்டையோட்டுப் பூநூல். சரப்பளி முதலிய கழுத்தணிகள். தோள் மாலை, கேயூரங்கள், நான்கு கைவளைகள், ஐந்து விரல்களிலும் மோதிரங்கள் (தமிழக சிற்பங்களில் நடுவிரலில் மோதிரம் இருப்பதில்லை), கால்களில் மணி மாலைகள். முலைகளின் மேல் சுற்றியிருக்கும் நாக குச பந்தம். 

இடது கால் மடித்து வலது கால் கீழே தொங்க சுகாசனத்தில் அமர்ந்திருக்கிறாள் அன்னை. அவள் வலது காலடியில் வாளும் கேடயமும் பயனற்று கைகளில் கிடக்க விழி பிதுங்கி, வாய் பிளந்து அழுந்திக் கிடக்கும் அசுரன் தாருகன். கரண்ட மகுடம், சுருட்டை முடி, பனையோலைக் குண்டலங்கள், தோள் மாலை, தோள் வளைகள், கை வளைகள், பூநூல், உதர பந்தம், இடை ஆடை, கால் வளைகள் அணிந்துள்ளான். மார்பில் சூலத்தின் மும்முனைகள் கிழித்த தடங்கள் தெரிகின்றன.

பெங்களூரு அருங்காட்சியகம்: சுகாசனக் காளி 2

புராணம் 

அசுரன் தாருகன் சிவனை எண்ணிக் கடும் தவம் புரிந்து வரம் பெற்றான். அவன் மரணம் ஒரு பெண்ணால் மட்டுமே நிகழும் என்று. தேவர்களை வென்றடக்கினான். தேவர்கள் சிவனிடம் முறையிட அவர் தன் நீலகண்டத்தைத் தடவினார். அங்கிருந்த ஆலகால விஷத்தில் இருந்து கரிய போர் அணங்காகத் தோன்றினாள் காளி. சிவனின் ஆணைப்படி தாருகனை வென்றழித்தாள். அவள் அடி கீழ் அமையும் அருள் பெற்றான் அசுரன். 

பெங்களூரு அருங்காட்சியகம்: சுகாசனக் காளி 3

இலக்கியம் 

இந்த நிகழ்வை 'தாருகன் பேருரம் கிழித்த பெண்' என்று சிலப்பதிகாரம்  குறிப்பிடுகிறது. (உரம் = மார்பு)


சிற்பம் பற்றிய தகவல்கள் 

130 செ மீ உயரம் கொண்ட இந்த சிற்பம் கோலார் மாவட்டம் அவனி என்ற கிராமத்தில் இருந்து கிடைத்தது. இவ்வூர் ASI கீழ் உள்ள நுளம்பர் கோயில்கள் கொண்ட ஊர். நுளம்பர் கலைப்பாணி.

நுளம்பர்கள் 

நுளம்பர்கள் என்னும் சிற்றரசர்கள் நுளம்பபாடியை ஆண்டனர். அதன் தலைநகரம் தற்போதைய ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹேமாவதி என்ற ஊர். நுளம்பபாடி அனந்தப்பூர், தற்போதைய கர்நாடக மாநிலத்தின் தும்கூரு, பெல்லாரி, கோலார், சித்ரதுர்கம், தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. இவ்விடங்களில் அவர்களது கல்வெட்டுகளும் கோயில்களும் உள்ளன. நுளம்பர்கள் ஆட்சி காலம் கி பி 8 ஆம் நூற்றாண்டு முதல்  11 ஆம் நூற்றாண்டு வரை. வடக்கே ராஷ்டிரகூடர்கள், தெற்கே சோழர்கள், ஆகிய பேரரசுகள் மேற்கே கங்கர்கள் இவர்களுக்கு இடைப்பட்ட நிலம். நுளம்பர்களின் பெயர் சொல்லும் முக்கிய படைப்புகள் மூன்று.
  1. கோலார் மாவட்டம் அவனி இல் உள்ள ராமலிங்கேசுவரர் கோயில்கள் 
  2. தும்கூரு மாவட்டம் அவலகுப்பே இல் உள்ள கல்லேசுவரர் கோயில் 
  3. சிக்கபல்லபூர் நந்திமலையில் உள்ள போக நந்தீசுவரர் கோயில் 

நன்றிக்கடன் 

காளி புராணம் (https://aanmikam.blogspot.com/2014/07/blog-post_4384.html)

சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், வழக்குரைகாதை
"அறுவருக்கு இளைய நங்கை. இறைவனை 
ஆடல் கண்டருளிய அணங்கு, சூருடைக் 
கானகம் உகந்த காளி, தாருகன் 
பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்"

Catalogue of Sculptures; Government Museum, Bengaluru; Dept of Archeology Museum and Heritage; First Ed; 2015

https://en.wikipedia.org/wiki/Nolamba_dynasty


வெறி அடங்குதல்

தேவிகாபுரம் கோயில் சிற்பம்

ஜுவாலா மகுடம், நாகம் சுற்றிய சூலம் உடுக்கை, கையில் சிறு குழவி, வலது புரம் பேய்ப்படையில் ஒருத்தி, இடது புரம் பணிப்பெண்.

தாருகாசுரனை அழித்த காளி போர்வெறி தணியாது உலகெங்கும் சுற்றித் திரிந்து அழிவை ஏற்படுத்தினாள். காளியின் போர்வெறியை அணைக்க சிவன் குழந்தை உருக்கொண்டு இடுகாட்டில் கிடந்து அழுதார். பசியால் அழும் குழந்தையைக் கண்ட காளி அதனைத் தூக்கி மார்புடன் அணைத்துப் பால் கொடுத்தாள். காளியிடம் பால் குடித்த குழந்தை பாலுடன் அவளுடைய கோபத்தையும் சேர்த்துப் பருகியது. காளியின் கோபம் தணிந்தது. 

துணை:

https://www.facebook.com/SriMuthuMariAmmanTemple/posts/1964423970493050/


'சாம்பாயி' - கல்வராயன் மலை எருக்கம்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம்


இடக்குறி: 11°52'41.2"N 78°44'26.6"E


தொட்டகடவல்லி லக்ஷ்மி கோயில், கர்நாடகா - காளி, வேதாளங்கள்



காளிக்கு வாயிற்காவலர்களாக நிற்கும் வேதாளங்கள்

Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

திருமாலின் 24 வடிவங்கள்

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்